தீவெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள் பெரும்பாலானோர் லாபம் ஈட்டியுள்ளபோதும், சிங்கப்பூரின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் வீடுகளின் மறுவிற்பனைகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒன்று மூன்றாம் காலாண்டில் நஷ்டத்தில் முடிந்துள்ளன.
தீவு முழுவதும் நஷ்டத்தை ஏற்படுத்திய பரிவர்த்தனைகளின் விகிதம் மூன்றாம் காலாண்டில் 4.6 விழுக்காடாக உயர்ந்தது. இது முந்தைய காலாண்டில் பதிவான 3.7 விழுக்காட்டையும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 3.3 விழுக்காட்டையும்விட அதிகம் என்று ‘த பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழுக்காக ‘குஷ்மேன் அன்ட் வேக்ஃபீல்ட்’ சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனம் தொகுத்த தரவுகள் காட்டுகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நஷ்டத்தில் விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் விகிதம் ஆக அதிகமாக 6.9 விழுக்காடாகப் பதிவானது. அதன் பிறகு, நஷ்டத்தில் விற்கப்பட்ட மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளின் ஆக அதிக விகிதம் இதுவே ஆகும்.
நஷ்டத்தை ஏற்படுத்திய மொத்தப் பரிவர்த்தனைகளில் 49 விழுக்காடு முக்கிய மத்திய வட்டாரத்தைச் சேர்ந்தவை. அவ்வட்டாரத்தில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளில் 19.5 விழுக்காடு நஷ்டத்தில் முடிந்தன. இது முந்தைய காலாண்டின் 17.7 விழுக்காட்டைவிட சற்று அதிகம்.
அதனுடன் ஒப்பிடுகையில், மத்திய வட்டாரத்தின் எஞ்சிய பகுதிகளில் நஷ்டத்தில் முடிந்த பரிவர்த்தனைகள் 2.7 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காடாக உயர்ந்தன.
மத்திய வட்டாரத்திற்கு வெளியில் உள்ள புறநகர்ப் பகுதியில், அந்த விகிதம் இரண்டாம் காலாண்டில் பதிவான 1.3 விழுக்காட்டிலிருந்து 1.6 விழுக்காடாகச் சற்று உயர்ந்தது.
நஷ்டத்தை ஏற்படுத்திய மொத்தப் பரிவர்த்தனைகளில் மத்திய வட்டாரத்தின் எஞ்சிய பகுதிகளிலிருந்து 30 விழுக்காடும் மத்திய வட்டாரத்திற்கு வெளியில் உள்ள பகுதிகளிலிருந்து 20 விழுக்காடும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
