கூட்டு விற்பனைவழி $810 மில்லியனுக்கு 99 ஆண்டு குத்தகைக்குரிய தாம்சன் வியூ கூட்டுரிமை வீடுகளை சிங்கப்பூர் லேண்ட், கேப்பிட்டலேண்ட் டிவெலப்மெண்ட் நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கூட்டுரிமை உரிமையாளர்களின் ஒதுக்கு விலையான $918 மில்லியனைக் காட்டிலும் 12 விழுக்காடு குறைவான விலையில் இந்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
இதற்கிடையே, வீட்டு உரிமையாளர்களில் குறைந்தது 80 விழுக்காட்டினர் இதற்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தம் நிறைவேறும் என்றும் அறியப்படுகிறது.
கிட்டத்தட்ட ஐந்து ஹெக்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைந்துள்ள இந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பு, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் $918 மில்லியன் விலையில் ஏலக்குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர், ஜூலை மாதம் மீண்டும் அதே விலையில் விற்பனைக்கு வந்தது.
இதையடுத்து, இம்மாத முற்பாதியில் விலையைக் குறைத்து விற்க முற்பட்டனர், கூட்டுரிமையின் உரிமையாளர்கள்.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்துள்ள கூட்டு விற்பனைகளில் ஆகப் பெரிய ஒப்பந்தமாக இது விளங்குகிறது.
கூட்டுரிமைக்கான குத்தகைக் காலம் 1975ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையே, விலை குறைக்கப்பட்ட நிலையில், பலதரப்புகள் கூட்டுரிமையைச் சொந்தமாக்கிக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

