சட்டவிரோத வாடகை வாகனச் சேவை

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இடையே சேவை வழங்கியோரைக் காணமுடிவதில்லை

2 mins read
72d64348-35fb-4704-bc8b-fada0dc331b0
உட்லண்ட்ஸ் காஸ்வே பாலம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே சட்டவிரோதமாக வாகனப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கிவந்தோர் இப்போது அச்சத்தில் பின்வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக அத்தகைய சேவை வழங்குவோர் பன்னோக்குச் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவர். அதுபோன்ற ஒவ்வொரு வாகனத்தையும் வாங்க 500,000 ரிங்கிட்டுக்கும் (151,898 வெள்ளி) மேல் செலவாகும்.

அவற்றை வைத்து சட்டவிரோத வாடகை வாகனப் போக்குவரத்துச் சேவை வழங்கியவர்கள் நாளுக்கு 1,650லிருந்து 3,300 ரிங்கிட்டுக்கு இடையே சம்பாதித்தனர்.

ஆனால், இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த வாகனங்களைக் குறிவைத்து நடவடிக்கை மேற்கொண்ட பிறகு அத்தகைய சேவை வழங்கியோர் தலைமறைவாகிவிட்டனர். லார்க்கின் சென்ட்ரல் முனையத்தில் பயணிகளுக்காகக் காத்திருந்தவர்களை இப்போது காணவில்லை.

சிங்கப்பூரின் நடவடிக்கை மலேசியாவில் பதிவான வாகனங்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், இம்மாதம் ஒன்பதாம் தேதி முதல் மலேசியாவின் சாலைப் போக்குவரத்துப் பிரிவு (ஜேபிஜே), சிங்கப்பூர் வாகனங்களைக் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது.

உரிமத்துடன் எல்லை தாண்டிய டாக்சி சேவை வழங்கும் ஓட்டுநர்களுக்கு இத்தகைய முறியடிப்பு நடவடிக்கைகள் நற்செய்தியாக அமைந்துள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஓட்டுநர்கள் இதைத் தெரிவித்தனர்.

நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத எல்லை தாண்டிய வாடகை வாகனச் சேவை குறித்து உரிமம் உள்ள டாக்சி ஓட்டுநர்கள் பல ஆண்டுகளாகக் கவலை தெரிவித்துவந்ததாக அவர்கள் சுட்டினர். சட்டவிரோத வாடகை வாகனச் சேவை வழங்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாதிருந்ததாக சிலர் கூறினர்.

தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூர் டாக்சிகள், லார்க்கின் சென்ட்ரல் முனையத்திலிருந்து பயணிகளை சிங்கப்பூரின் இதர பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதி உள்ளது.

குறிப்புச் சொற்கள்