பிடோக் நார்த்தில் உள்ள ‘லாவ் கா’ காப்பிக்கடையில் (Lau Ka Kopitiam), சனிக்கிழமை இரவு கருப்புப் பை ஒன்று கவனிக்கப்பாரற்று இருக்கை ஒன்றில் காணப்பட்டது.
56 வயது உணவுக் கடைப் பணியாளர் லாவ் குவாட் போ, ஏறத்தாழ 10 நிமிடங்களுக்கு அந்தப் பையைச் சற்று நேரம் கண்காணித்தார்.
எவரும் அப்பையை எடுக்க வராததால் திருவாட்டி லாவ்வும் அவரது சக ஊழியர்கள் இருவரும் அடையாள அட்டையைத் தேடுவதற்காகக் கேமராவின் கீழ் அந்தப் பையைத் திறந்தனர்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்தப் பையில் ரொக்கமாக நிரம்பியிருந்தைக் கண்டனர்.
அவர்கள், தங்கள் முதலாளியான காப்பிக் கடை நடத்துநர் லோ பூன் சுவானிடம் தகவல் தெரிவித்தனர். அவர், உடனடியாகத் தனது தொலைபேசியில் ‘சிசிடிவி’ காட்சிகளைப் பரிசோதித்தார்.
இணையரான 70 வயதான டான் இயோக் சின்னும் அவருடைய 63 வயது மனைவி லோ ஹாங் ஜியோக்கும் பணத்தை விட்டுச் சென்றதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதிச் சடங்கிற்குச் சென்ற அவசரத்தில் அதைத் தவறவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இரவு வீடு திரும்பிய பின்னரே பணப்பையைக் காணவில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்தது.
சாய் சீயில் இயங்கி வரும் ‘டான் யூ பெங் ஃபுட் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நூடுல்ஸ் உற்பத்தி ஆலையை நடத்தி வரும் அவர்கள், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக $20,000 ரொக்கத்தை வைத்திருந்தனர். கிட்டத்தட்ட 25 ஊழியர்கள் அத்தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.
