இஸ்தானா பொதுவரவேற்பு: திரளாகப் பங்கேற்ற பொதுமக்கள்

4 mins read
32d4b920-91ab-4207-9d2e-789186380a7c
‘ஹெல்த் சர்வ்’ அமைப்பில் தொண்டாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது மனைவி ஜேன் இத்தோகி. - படம்: பே கார்த்திகேயன்

தீபாவளியை முன்னிட்டு, இஸ்தானா (அதிபர் மாளிகை) வளாகம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், இந்தியப் பாரம்பரிய அங்கங்கள் பலவற்றுடன் களைகட்டியது அதிபர் மாளிகை.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது மனைவி ஜேன் இத்தோகியுடன் காலை 10.40 மணியளவில் பொதுமக்களைச் சந்தித்தார். அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தையும் அதிபரையும் அவரது மனைவியையும் காணப் பொதுமக்கள் 9,500 பேர் திரண்டு வந்தனர்.

தம்மைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள், மூத்தோர் சிலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிபர், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.

வாயிற்தோரணங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறியும் அதிபர் தம்பதியர்.
வாயிற்தோரணங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறியும் அதிபர் தம்பதியர். - படம்: பே கார்த்திகேயன்

மேடையில் நிகழ்த்தப்பட்ட பரத நாட்டியத்தைக் கண்டு ரசித்த அதிபர் தம்பதியர் அது குறித்த விளக்கங்கள், பாரம்பரிய முக்கியத்துவம் ஆகியவற்றைக் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, குதிரைகளின் உதவியுடன் மனநல ஆதரவளிக்கும் ‘ஈக்குவல் +’ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களின் ‘ஹெல்த் சர்வ்’ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் காட்சிக் கூடங்களை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.

கைகளால் தோரணம் வடிவமைக்கும் கூடம் அமைத்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள், தோரணம் தொடர்பான தகவல்களை அதிபருடனும் அவரது மனைவியுடனும் பகிர்ந்தனர்.

பல்லின மக்கள் ஒன்றுகூடல்

சிண்டா கூடத்தில் ரங்கோலிக் கோலம் வரைந்து மகிழ்ந்த சிறுமி.
சிண்டா கூடத்தில் ரங்கோலிக் கோலம் வரைந்து மகிழ்ந்த சிறுமி. - படம்: பே கார்த்திகேயன்

“எப்போதும் வீட்டுக்குள் இருக்கும் எனக்கு அதிபரையும், அவரது அதிகாரபூர்வ மாளிகையையும் பார்க்கும் ஆசை இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு முதன்முறை கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நண்பர்கள், குடும்பத்தினருடன் வந்ததும், பலரைப் பார்த்து, கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததும் மனமகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் தள்ளாத வயதிலும் உற்சாகத்துடன் தென்பட்ட திருவாட்டி நாகேஸ்வரி, 87.

குடும்பத்தினர், நண்பர்களுடன் திருவாட்டி நாகேஸ்வரி (இடமிருந்து இரண்டாமவர்), ஆசிரியை தனலெட்சுமி (வலது).
குடும்பத்தினர், நண்பர்களுடன் திருவாட்டி நாகேஸ்வரி (இடமிருந்து இரண்டாமவர்), ஆசிரியை தனலெட்சுமி (வலது). - படம்: பே கார்த்திகேயன்

“சிராங்கூன் பகுதியிலிருந்து இதற்காகக் காலையிலேயே வந்தேன். அதிபரை அருகில் பார்த்தது மகிழ்ச்சி. குடும்பத்தினருடன் நேரம் செலவிடக் கிடைத்த வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது,” என்றார் பிள்ளைப் பராமரிப்பு ஊழியர் தமிழ்ச்செல்வி, 61.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமது மாணவர்களை நடன நிகழ்ச்சிக்காக முதன்முறை பொது வரவேற்புக்கு அழைத்து வந்ததாகக் கூறிய ஆசிரியை தனலெட்சுமி, இவ்வாண்டு, குடும்பத்தினர், நண்பர்கள் என ஏழு பேரை அழைத்து வந்திருந்தார்.

நானும், எனது தோழி சாந்தாவும் எங்களது வயதான தாய்மாரை அழைத்து வந்தோம். அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர்கள் கூறும்போது மனநிறைவு ஏற்பட்டது. அவர்கள் அதிபரைப் பார்த்து மகிழ்ந்தனர். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கூடுதலாக மகிழ்ந்தோம்,” என்றார் அவர்.

தமது குடும்பத்தினருடன் ஹரிகிரு‌ஷ்ணன் (இடமிருந்து மூன்றாமவர்)
தமது குடும்பத்தினருடன் ஹரிகிரு‌ஷ்ணன் (இடமிருந்து மூன்றாமவர்) - படம்: பே கார்த்திகேயன்

“அதிக எண்ணிக்கையில் தமிழ் மக்களைக் கண்டதில் மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது,” என்றார் குடும்பத்தினர் பத்துப் பேருடன் இஸ்தானாவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த பிடோக்வாசி ஹரிகிரு‌ஷ்ணன், 57.

மூன்று தலைமுறையினராக, மகள் மகாலட்சுமி, பேத்தி தன்வியுடன் வந்திருந்தார் அன்பரசி, 63. “மிகச் சிறிய வயதில் இஸ்தானாவைச் சுற்றிப் பார்த்த நினைவு. அதன்பின், பல ஆண்டுகள் கழித்து வந்தேன். அதிபரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்,” என்றார் அவர்.

பாரம்பரியத்தையும் சமூக அக்கறையையும் பறைசாற்றிய நிகழ்ச்சி

அதிபர் முன்னிலையில் இரு பரதநாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழக மாணவி நாச்சியம்மை சிவசந்தோ‌ஷி வைரவன், 20.

கடவுளையும் நிகழ்ச்சியைக் காணும் பெரியோரையும் மலர்தூவி வணங்கும் வகையில் அமைந்த பு‌ஷ்பாஞ்சலி நடனத்தைத் தொடர்ந்து பாரதிதாசன் பாடலுக்கும் அவர் நடனமாடினார்.

“நான் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடனம் கற்கிறேன். அதிபரின்முன் நடனமாடியதை அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். அனைவரும் ரசித்துக் கைதட்டியது உற்சாகமளிக்கிறது,” என்றார் அவர்.

பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடிய மாணவி நாச்சியம்மை, அவரது தாயாரும், கலாமஞ்சரியின் நிறுவனருமான செளந்திரநாயகி வைரவன்.
பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடிய மாணவி நாச்சியம்மை, அவரது தாயாரும், கலாமஞ்சரியின் நிறுவனருமான செளந்திரநாயகி வைரவன். - படம்: பே கார்த்திகேயன்

அவரது தாயாரும், கலாமஞ்சரியின் நிறுவனருமான செளந்திரநாயகி வைரவன், “அதிபர், அவரது மனைவி ஆகியோரின் அருகில் அமர்ந்து நடனம்குறித்து விளக்க வாய்ப்பு கிட்டியது. நாட்டியக் கலை, தமிழ்க் கவிதைகள் குறித்தும் பேசினேன். பெருமையான தருணம் அது,” என்றார்.

இந்தியாவிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் எங்களுக்கு, சிங்கப்பூர் அதிபரைப் பார்க்கவும் அவரது அதிகாரபூர்வ மாளிகையில் கூடம் அமைக்கவும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்,” என்றார் 16 ஆண்டுகளாகக் கட்டுமானத் துறையில் பணியாற்றும் ஜீவதாஸ், 40. பல்லின மக்களுக்கும் தோரணங்கள் குறித்து விளக்கியதில் மகிழ்ச்சி என்றார் அவர்.

“15 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன். இஸ்தானாவைப் பார்ப்பது இதுவே முதன்முறை,” என்றார் கட்டுமானத் துறையில் பணியாற்றும் தங்கேஸ்வரன் குமார், 38. பங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்களிடம், பணியிடத்தில் பாதுகாப்பாக இருப்பது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, சிரமமான நேரங்களில் பிறருடன் பேசிப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அதிபர் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

குதிரைகளின் உதவியுடன் மனநல ஆதரவளிக்கும் ‘ஈக்குவல் +’ அமைப்பினருடன் அதிபர் தர்மன், அவரது மனைவி ஜேன் இத்தோகி.
குதிரைகளின் உதவியுடன் மனநல ஆதரவளிக்கும் ‘ஈக்குவல் +’ அமைப்பினருடன் அதிபர் தர்மன், அவரது மனைவி ஜேன் இத்தோகி. - படம்: பே கார்த்திகேயன்

சிறு பிள்ளைகளுக்கு ரங்கோலிப் பயிற்சி, பெரியவர்களுக்குக் கடிதமெழுதும் அங்கம், கேள்வி பதில் அங்கம் ஆகியவற்றுடன் களைகட்டியது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கக் (சிண்டா) கூடம். சிண்டாவின் சமூக ஈடுபாட்டுப் பிரிவில் பணியாற்றும் பத்மநாதன், 36, “சிண்டா சார்பில் பல்வேறு சமூக ஈடுபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக இஸ்தானாவில், இந்தியப் பாரம்பரியக் கலையான கோலமிடுதலைச் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்தோம். பல்லினப் பிள்ளைகளிடையே பெருவரவேற்பு கிட்டியது,” என்றார்.

காலை 8.30 மணி முதல் மாலை 6 மணிவரை இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட நிலையில், கைவினைப் பொருள்கள் வடிவமைத்தல், மருதாணி இடுதல், முக ஓவியம் எனப் பல்வேறு அங்கங்களிலும் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்