பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு எதிரான மிரட்டல், வசைபாடுதல், அச்சுறுத்தல் என எந்தவொரு செயலையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாகத் தேசியப் போக்குவரத்து ஊழியர் சங்கம் கூறியுள்ளது.
கோ-அஹெட் சிங்கப்பூர் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணியால் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு, மிரட்டப்பட்டதையடுத்து சங்கம் இவ்வாறு கூறியது.
நவம்பர் 4ஆம் தேதி அங் மோ கியோ அவென்யூ 6ல் சென்ற பேருந்துச் சேவை எண் 136ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட ஓட்டுநருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சட்ட ஆதரவையும் வழங்க கோ-அஹெட்டுடன் தான் தொடர்பில் இருப்பதாகச் சங்கம் குறிப்பிட்டது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் வெளியானது. பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது பயணி ஒருவர் ஓட்டுநரை அணுகி அவருடன் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில், ஓட்டுநரை அடிப்பதுபோல் அவர் கையை ஓங்கினார்.
இணையவாசிகள் பலரும் அந்த ஆடவரின் செயலைக் கண்டித்துள்ளனர். பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது வாக்குவாதம் செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சிலர் கூறினர்.
சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்கமளித்த கோ-அஹெட், பேருந்து நிறுத்தத்தில் நின்ற பயணி, பேருந்தை முன்னே எடுக்குமாறு சைகை காட்டியதாகவும் பேருந்து நிறுத்தப் பகுதிக்குள் செல்லவிருந்ததால் அவரைக் காத்திருக்குமாறு ஓட்டுநர் சைகை காட்டியதாகவும் கூறியது. அங்கு தடுப்புச்சுவர் இருந்ததால் பாதுகாப்புக் கருதி பேருந்துக் கதவுகள் திறக்கப்படவில்லை.
பேருந்தில் ஏறியதும் ஆத்திரமடைந்த பயணி, ஓட்டுநர் விளக்கமளித்தபோதும் அவரைத் தொடர்ந்து வசைபாடினார். கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் நீடித்த வாக்குவாதத்துக்குப் பிறகு அந்தப் பயணி பேருந்தின் பின்னிருக்கைக்குச் சென்றார். ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று கோ-அஹெட் திட்டவட்டமாகக் கூறியது.
