திருடப்பட்ட வங்கி அட்டைகளின் விவரங்களைப் பயன்படுத்தி, மின்கருவிகள் விற்கும் கடைகளில் பொருள்களை வாங்கி பண மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் சீன நாட்டவர்கள். 25 முதல் 36 வயதுக்குட்பட்ட அவர்கள் வெளிநாட்டு மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 7.45 மணியளவில், சிம் லிம் ஸ்குவேரில் உள்ள கடை ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அந்தக் கடையில் $2,700க்கும் அதிக மதிப்புள்ள இரண்டு கணினி வரைகலை அட்டைகளை (Graphics Card) வாங்கிய 36 வயது ஆடவர், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் கடைக்குச் சென்று $4,000க்கும் அதிக மதிப்புள்ள மின்னணுக் கருவிகளை வாங்க முயன்றார்.
அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள், அவரைப் பிடித்து வைத்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைப்பேசி செயலிமூலம் கிடைத்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அந்த ஆடவர், விலையுயர்ந்த மின்னணுப் பொருள்களை வாங்கியது தெரியவந்தது. வாங்கிய பொருள்களை வாகனத்தில் காத்திருந்த கூட்டாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் கடைக்குச் சென்றபோது அவர் பிடிபட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலும், கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளின் துணையுடனும் மற்ற இரு ஆடவர்களையும் காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற அந்த 25 மற்றும் 27 வயது ஆடவர்கள் அக்டோபர் 27ஆம் தேதி பிடிபட்டனர். அவர்கள் மற்றொரு கடையிலும் பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மூவரிடமிருந்து கணினி வரைகலை அட்டைகளும் ஐஃபோன் 18 புரோ மேக்ஸ் உள்ளிட்ட திறன்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நீதிமன்றம் இந்த வழக்கை, வரும் நவம்பர் 4 ஆம் தேதி மீண்டும் கையாளும்.
மூவர்மீதும் அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, இணையத்தில் பணம் செலுத்தும்போது நம்பகமான இணையத்தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் வங்கி அட்டை விவரங்களையும் ‘ஒடிபி’ எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வங்கிப் பரிவர்த்தனைகளைத் தவறாமல் சரிபார்த்து, சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் தென்பட்டால் உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
