பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் ஐந்தில் மூவர்

பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் ஐந்தில் மூவர்

2 mins read
விலை அதிகரிப்பு காரணம்
e49d723d-2928-40ab-bd11-2e90bb955862
கோடைக்காலத்தில் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக் போவதை சிங்கப்பூரர்கள் பலர் விரும்புகின்றனர். - படம்: Hotels.com

விமானப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் சுமார் 59 விழுக்காட்டு சிங்கப்பூர் பயணிகள் இவ்வாண்டுக்கான பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வதாக உலகப் பயணத் தளமான ஸ்கைஸ்கேனர் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அடுத்த மூன்று மாதங்களில் தங்களால் வெளிநாடுகளுக்குப் போக முடியும் என்ற நம்பிக்கையும் 60 விழுக்காட்டு சிங்கப்பூர் பயணிகளிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைஸ்கேனரின் அறிவார்ந்த கோடைக்கால அறிக்கையில் (Smarter Summer report) இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச்சிலிருந்து ஏப்ரல் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 1,000 சிங்கப்பூரர்களிடையே கருத்தாய்வு நடத்தி அறிக்கை வரையப்பட்டது.

அறிக்கை முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வெளியிடப்பட்டன.

ஈரான் போர், பயண, விமானத் துறைகளைப் பாதித்துள்ளபோதும் பயணிகள் பலரிடையே நம்பிக்கை தொடர்ந்து காணப்படுகிறது. போர் காரணமாக மத்திய கிழக்கு வட்டாரத்தில் ஆகாயப் போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டு வருகின்றன. அதனால் எரிபொருள் விலை அதிகரிப்பால் விமானப் பயணக் கட்டணங்களும் கூடியுள்ளன.

மத்திய கிழக்கு வட்டாரம், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பயணங்களுக்கு விமான மாற்றுச் சேவைகளை வழங்கும் தளமாக விளங்குகிறது.

கருத்தாய்வில் பங்கேற்றோரில் 91 விழுக்காட்டினர் கோடைக்காலமான வரும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். மேலும், 35 விழுக்காட்டினர் மட்டுமே கோடைக்கால விடுமுறைப் பயணங்களுக்குப் பதிவுசெய்யவில்லை. ஆனால், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தங்களின் சூழ்நிலைக்கேற்ப கட்டுப்படியான விலையில் பயணத் தெரிவுகளைக் கண்டுபிடிப்பதே கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பயணி எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ள வாரத்தில்தான் விமானப் பயணங்கள் ஆகத் தோதான விலையில் அமைவது அறிக்கை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பேங்காக், கோடைக்காலத்தில் சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாக விளங்குகிறது.

அதோடு, தங்கள் நண்பர்கள், குடும்பத்தார் உள்ளிட்டோர் இதுவரை போகாத இடத்துக்குப் பயணம் மேற்கொள்வதை 76 விழுக்காட்டு சிங்கப்பூர் பயணிகள் விரும்புகின்றனர். குறிப்பாக, ஜென் ஸீ என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினரிடையே இந்தப் போக்கு காணப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்