ஐவரில் மூவர் இணையவழித் தீங்குக்கு உள்ளாயினர் அல்லது உள்ளானோரை அறிந்திருந்தனர்: ஆய்வு

இணையத்தைப் பயன்படுத்துவோரில் ஐவரில் கிட்டத்தட்ட மூவர் இணையவழித் தொல்லை, பாலியல் அச்சுறுத்தல் போன்ற இணையவழித் தீங்குகளுக்கு உள்ளாயினர் அல்லது அந்நிலைமைக்கு உள்ளானவர்களை அறிந்திருந்தனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு கண்டறிந்தது.

எஸ்ஜி ஹெர் எம்பவர்மண்ட் அமைப்பு நடத்திய இந்த ஆய்வின்படி, இணையவழித் தீங்குக்கு உள்ளானதாக ஆய்வில் தெரிவித்தவர்களில் 52 விழுக்காட்டினர் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இந்த வயதினரில் ஆண்களைவிடப் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சாத்தியம் இருமடங்கு அதிகம் என்பதையும் ஆய்வு கண்டறிந்தது.

ஆய்வை நடத்திய அமைப்பு, இணையவழித் தீங்குக்கு உள்ளாவோருக்கு ஆதரவளிக்கும் முதல் நிலையத்தை (SheCares@SCWO) சிங்கப்பூர் மாதர் அமைப்புகள் மன்றத்துடன் இணைந்து ஜனவரி மாதம் தொடங்கியது. பெண்களும் சிறுமியரும் இணையவழி எத்தகைய தீங்குக்கு உள்ளாகின்றனர் என்பதைக் கண்டறிவதற்காக ஆய்வை அமைப்பு மேற்கொண்டது.

ரிசென்ஸ் ஆய்வு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 15 வயது முதலான 1,056 பேர் பங்கெடுத்தனர். அவர்களில் 52 விழுக்காட்டினர் பெண்கள்.

ஆய்வில் பங்கெடுத்தோரில் 38 விழுக்காட்டினர் இணையவழித் தீங்குக்கு நேரடியாக உள்ளானதாகக் தெரிவித்தனர். இணையவழித் தீங்குக்கு உள்ளானோரைத் தெரியும் என்று 47 விழுக்காட்டினர் கூறினர்.

பாலியல் அச்சுறுத்தல், படங்களைப் பயன்படுத்தும் பாலியல் துன்புறுத்தல், இணையவழித் தொல்லை, இணையவழி பின்தொடர்தல், அடையாளத் திருட்டு, அவறூது, ஒதுக்கும் வழக்கம், வெறுப்பைத் தூண்டுதல், அடையாளப்படுத்துதல் ஆகியவை இணையவழித் தீங்குகளில் உள்ளடங்கின.

ஏறக்குறைய 14 விழுக்காட்டினர் இணையவழி பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், 12 விழுக்காட்டினர் இணையவழித் தொல்லைக்கு உள்ளானதாகவும் ஆய்வில் தெரிவித்தனர்.

இணையவழித் தீங்குக்கு உள்ளானோரில் 45 விழுக்காட்டினர் ஃபேஸ்புக்கில் அந்நிலைமைக்கு உள்ளானார்கள்.

வாட்ஸ்அப் செயலியில் 30 விழுக்காட்டினரும், இன்ஸ்டகிராமில் 24 விழுக்காட்டினரும் தீங்குக்கு உள்ளானார்கள்.

இணையத்தில் வெளியிட்ட தனிப்பட்ட கருத்துகள், தங்களது தோற்றம், இனம், பாலினம் போன்ற காரணங்களால் தீங்குக்கு உள்ளானதாகப் பங்கேற்பாளர்கள் நம்புகின்றனர்.

இணையவழித் தீங்கைத் தவிர்க்க, 66 விழுக்காட்டினர் தங்களது கருத்துகளைச் சொந்தமாகத் திருத்திக்கொண்டனர் அல்லது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் போன்றோருடன் மட்டும் இணையவழித் தொடர்பிலிருந்தனர்.

இணையவழித் தீங்குக்கு உள்ளானோரில் ஐவரில் மூவர் ‘குறைந்தது ஒரு கடுமையான பாதிப்புக்கு’ உள்ளானதாகத் தெரிவித்தனர். உடல்நலப் பிரச்சனைகள், மனநலப் பிரச்சனைகள், தற்கொலை எண்ணம் போன்றவை இதில் உள்ளடங்கும்.

“இணையவழித் தீங்குகளால் தனிமனிதர்களும் சமுதாயமும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் சமுதாயத்தால் ஏற்கப்படும் புதிய நடைமுறையாகிவிடும்,” என்று எஸ்ஜி ஹெர் எம்பவர்மண்ட் அமைப்பின் தலைமை நிர்வாகி சிம்ரன் தூர் கூறினார்.

சட்ட அமைச்சும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் பங் ஹாவ் சட்டக் கல்விக் கழகமும் ஏற்பாடு செய்யும் இணையவழித் தீங்குகள் கருத்தரங்கில் ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஆராயப்படும். இந்தக் கருத்தரங்கு செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!