தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக இணையவழி ஊழியர்களாக பணியாற்றிய வெளிநாட்டவர் மூவர் கைது

2 mins read
239c1a40-d08f-4a2e-8e5d-f08e2958b37f
தீவெங்கும் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டவர் மூவர் கைது செய்யப்பட்டனர். - படம்: Koh Poh Koon / ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் 370க்கும் அதிகமான விநியோகச் சேவை ஓட்டுநர்களிடம் மனிதவள அமைச்சு அமலாக்க நடவடிக்கைகளின் அங்கமாக சோதனை மேற்கொண்டது.

அவற்றில், சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வேலை செய்த வெளிநாட்டவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார, மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக மனிதவள அமைச்சு தீவெங்கும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நேற்று (ஆகஸ்ட் 18) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். தேசிய விநியோக ஆர்வலர்கள் சங்கம் விநியோகச் சேவை ஓட்டுநர்களிடம் மேற்கொண்டுவரும் தொடர்பு நடவடிக்கைகளில் சேகரிக்கப்பட்ட புகார்கள், கருத்துகளைக் கொண்டு அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டாக்டர் கோவின் ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

“எங்கள் நடவடிக்கைகளின்போது சோதனையிடப்பட்ட 375 விநியோகச் சேவை ஓட்டுநர்களில் வெளிநாட்டவர் மூவர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக வேலை செய்ததன் தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றார் டாக்டர் கோ.

அவர்களை சிங்கப்பூரில் சட்டவிரோத விநியோகச் சேவை ஓட்டுநர்களாகப் பணிபுரியவைத்த சிங்கப்பூரர்களிடமும் மனிதவள அமைச்சு விசாரணை நடத்திவருவதாவும் அவர் குறிப்பிட்டார்.

தகுந்த வேலை அனுமதி அட்டையின்றி சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவருக்கு அதிகபட்சமாக 20,000 வெள்ளி அபராதம் அல்லது ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வெளிநாட்டவர், தங்கள் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் சிங்கப்பூரர்களுக்கும் அதே தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று டாக்டர் கோ சொன்னார்.

“என்னதான் இணையவழி ஊழியர் முத்தரப்புக் குழு அதன் பரிந்துரைகளை உருவாக்கி வந்தாலும் சட்டவிரோத இணையவழி வேலைகளைத் தடுக்க இந்நடவடிக்கைகள் முக்கியம்,” என்று டாக்டர் கோ விவரித்தார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டவர் சட்டவிரோதமாக இணையவழி ஊழியர்களாகப் புணிபுரிவதால் உள்ளூர் இணையவழி ஊழியர்களின் வருமானம் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஊழியரணி குரல் கொடுத்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் முத்தரப்பு செயற்குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவில் மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, கிராப் சிங்கப்பூர் நிறுவனம் ஆகியவையும் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) மற்றும் அதன் தொடர்பு அமைப்புகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்