நலமாக மூப்படைதல் திட்டத்தில் மேலும் மூன்று அக்கம்பக்கப் பேட்டைகள்

நலமாக மூப்படைதல் திட்டத்தில் மேலும் மூன்று அக்கம்பக்கப் பேட்டைகள்

2 mins read
சிங்கப்பூரின் சுகாதாரக் குழுமங்கள் இத்திட்டத்தில் ஒருங்கிணையும்
83fa485d-aa10-4211-8765-acac674f111f
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை (மே 7) ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பிடோக், புக்கிட் பாஞ்சாங், தியோங்பாரு-ரெட்ஹில் ஆகிய குடியிருப்புப் பேட்டைகள், ‘நலமாக மூப்படைவதற்கான அக்கம்பக்கம்’ (ஏடபிள்யூஎன்) திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன.

அங்கு வாழும் மூத்த குடிமக்கள் மேம்படுத்தப்பட்ட பராமரிப்புச் சேவைகளையும் அவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அவர்கள் வாழ்க்கையை ஒரு குறிக்கோளுடன் சுதந்திரமாகவும் வசதியாகவும் மூப்படைவதற்கு இத்திட்டம் வழிவகுக்கும்.

இவ்வாண்டு (2026) முதல் மூத்த குடிமக்கள் அதிகமாக வாழும் குடியிருப்புப் பேட்டைகளில் ‘ஏடபிள்யூஎன்’ திட்டம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த 2025ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் மூப்படைந்து வரும் சமூகத்தைக் கருதில்கொண்டு, தோ பாயோவில் இத்திட்டம் அறிமுகமாகும் என்று அறிவித்தார்.

ஏறத்தாழ 110,000 மூத்த குடிமக்கள் வாழும் நான்கு குடியிருப்புகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு அவர்கள் பலனடைவர் என்று சுகாதார அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மூன்றும் வியாழக்கிழமை (மே 7) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதன் விவரங்ளை வெளியிட்டன.

நடப்பில் உள்ள ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி (Age Well SG) திட்டத்துடன் ‘ஏடபிள்யுஎன்’ திட்டத்தை அந்த மூன்று அமைச்சுகளும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்கின்றன. அதன்வழியாக மூத்த குடிமக்கள் அவர்கள் வாழும் சமூகங்களில் சுதந்திரமாக செயல்படலாம்.

திட்டத்தில் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள்

சிங்கப்பூரில் இயங்கும் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள், இத்திட்டத்தில் எந்தெந்த வட்டாரங்களில் உதவும் என்ற விவரத்தைச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் விளக்கினார்.

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் (என்எச்ஜி) தோ பாயோ வட்டாரத்திலும், சிங்ஹெல்த் குழுமம் பிடோக், தியோங் பாரு-ரெட்ஹில் வட்டாரங்களிலும் சேவையாற்றும்.

தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமம் (என்யுஎச்எஸ்) புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வாழும் முதியோர்களுக்கு உதவும்.

மூத்த குடிமக்களைத் துடிப்புடன் செயலாற்றவைத்து, சமூகத்துடன் அவர்களை இணைத்து, பல அமைப்புகளுடன் ஒத்துழைத்துச் சுகாதாரப் பராமரிப்பை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் வழங்கும் திட்டத்தின் தொடக்கம் இதுவாகும்.

ஏடபிள்யுஎன் திட்டத்தின் ஆதரவுடன், சுகாதாரக் குழுமங்கள் அவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்தி, சமூகத்துடன் பணியாற்ற இது வழிவகுக்கும் என்று சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை (ஏஐசி) ஏற்பாடு செய்த சமூகப் பராமரிப்புச் செயல்திட்டக் கருத்தரங்கு 2026ல் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்