இரு நாள்களில் மூன்று மோட்டார்சைக்கிள் விபத்துகள்; ஒருவர் உயிரிழப்பு

2 mins read
6b323740-7b15-4e2f-86f9-94941a868ea3
திங்கட்கிழமை (டிசம்பர் 16) நேர்ந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மாண்டுபோனார். - படங்கள்: ஃபேஸ்புக்/SINGAPORE ROADS ACCIDENT.COM

சிங்கப்பூரில் டிசம்பர் 16, 17 என இரு நாள்களில் மட்டும் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய மூன்று வெவ்வேறு விபத்துகள் நேர்ந்தன.

அவற்றில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மாண்டுபோனார்; மேலும் நால்வர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (டிசம்பர் 16) திங்கட்கிழமை மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிய விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற 37 வயது ஆடவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உட்லண்ட்சை நோக்கிச் செல்லும் அந்த விரைவுச்சாலையில், கிராஞ்சி விரைவுச்சாலைக்கு அருகே நேர்ந்த அவ்விபத்து குறித்து இரவு 8 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அதன் தொடர்பில் 25 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

அதே நாளில், நிக்கல் ஹைவே - பிராஸ் பசா சாலைச் சந்திப்பில் நேர்ந்த நடையரும் மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தில், மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் காயமுற்று, சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதுகுறித்து மாலை 4.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

மறுநாள் செவ்வாய்க்கிழமையன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே காரும் இரு மோட்டார்சைக்கிள்களும் மோதிய விபத்து நேர்ந்தது. அவ்விபத்தில் ஒரு மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் காயமடைந்து, சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவ்விபத்து காலை 7 மணியளவில் நேர்ந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு நேர்ந்த விபத்துகளில் மோட்டடார்சைக்கிளோட்டிகள், பின்னால் அமர்ந்து சென்றோர் என 68 பேர் உயிரிழந்தனர்; 4,290 பேர் காயமுற்றனர்.

குறிப்புச் சொற்கள்