தானியங்கி ‘கியர்’ கொண்ட கனரக வாகனங்களை ஓட்டுவோருக்காக மூன்று புதிய உரிம வகுப்புகளை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து போக்குவரத்துக் காவல்துறை அறிமுகப்படுத்த இருக்கிறது.
பிரிவு 4A, பிரிவு 4, பிரிவு 5 ஆகிய கனரக வாகன உரிம வகுப்புகள் ஏற்கெனவே நடப்பில் உள்ளன.
இந்த உரிமங்களை வைத்திருப்பவர்கள் ‘மேனுவல் கியர்’ ( ஓட்டுநர்கள் கியரை இயக்குவது), தானியங்கி கியர் கொண்ட கனரக வாகனங்களை ஓட்ட முடியும்.
புதிய கனரக வாகன உரிமங்களில் பிரிவு 4P, பிரிவு 5P, பிரிவு 4AP ஆகியவை அடங்கும்.
பிரிவு 4P உரிமம் வைத்திருப்பவர்கள் 2,500 கிலோ எடைக்கும் அதிகமான தானியங்கி கியர் வாகனங்களை ஓட்டலாம்.
பிரிவு 5P உரிமம் வைத்திருப்பவர்கள் 7,250 கிலோ எடைக்கும் அதிகமான தானியங்கி கியர் வாகனங்களை ஓட்டலாம்.
பிரிவு 4AP உரிமம் வைத்திருப்பவர்கள், தானியங்கி கியர் கொண்ட பிரிவு 4A வாகனங்கள் அல்லது பேருந்துகளை ஓட்டலாம்.
இது பொதுப் போக்குரவத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே.
தொடர்புடைய செய்திகள்
பிரிவு 4P வாகன உரிமத்துக்கான புதிய வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் பாதுகாப்பு வாகனம் ஓட்டும் நிலையத்தில் தொடங்கும்.
அந்த நிலையத்ததில் பிரிவு 4 உரிம வகுப்புகளில் பதிவு செய்தோருக்கு இந்தப் புதிய வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்படும்.
பணி நிமித்தம் கனரக வாகனம் ஓட்டுவோருக்கும் வேக வரம்பு சாதனம் பொருத்தப்பட்ட லாரிகளைக் கொண்ட நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கும் புதிய உரிம வகுப்புகளில் சேர முன்னுரிமை வழங்கப்படும்.
ஜனவரி 1, 2026 முதல், அதிகபட்சமாக 5,001 கிலோ முதல் 12,000 கிலோ வரை எடை கொண்ட, 2018ஆம் ஆண்டுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட பழைய கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஜூலை 1, 2027ஆம் ஆண்டுக்குள், 3,501 கிலோ முதல் 5,000 கிலோ வரை அதிகபட்ச எடை கொண்ட புதிய லாரிகள் உட்பட அனைத்து லாரிகளிலும், வாகனம் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதிக்காத வேகக் கட்டுப்பாடுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.