டிசம்பர் 26ஆம் தேதி மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறப்பு

டிசம்பர் 26ஆம் தேதி மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறப்பு

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2026 - 9:38 pm

1 mins read

பிடோக் சவுத், சுங்கை பிடோக், சீலின் ஆகிய மூன்று புதிய ரயில் நிலையங்கள் டிசம்பர் 26ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.

இதனால்,டௌன்டவுன் பாதையிலிருந்து தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைக்குப் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் மாற முடியும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் உள்ள பிடோக் சவுத், சுங்கை பிடோக் நிலையங்களும் டௌன்டவுன் பாதையின் சீலின் நிலையமும் பயணிகளுக்கான ரயில் இணைப்புகளை வலுப்படுத்தும்.

நாட்டின் கிழக்குப் பகுதி, நகரின் மையப் பகுதி, வடக்கு வட்டாரங்களுக்கு இடையிலான பயணத்தை இவை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கை பிடோக் சந்திப்பு நிலையத்தில் இவ்விரு பாதைகளின் ரயில் தளங்களும் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்டு உள்ளன. மேல் தளத்தில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையும் கீழ் தளத்தில் டௌன்டவுன் பாதையும் செயல்படும்.

இதனால் பயணிகள் நீண்ட தூரம் நடக்காமல் மிக விரைவாகப் பாதை மாற முடியும். சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு வரலாற்றில் இரு பாதைகளின் தளங்கள் இவ்வாறு வடிவமைக்கப்படுவது இதுவே முதல்முறை.

புதிய நிலையங்கள் கிழக்குப் பகுதி மக்களின் வாழ்க்கை, பணி, பயண வசதிகளை மேலும் எளிதாக்கும் என நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டடக் கலைத் துணை இயக்குநர் மைக்கல் ஓங் கூறினார்.

இந்த நிலையங்களில் நூற்றுக்கணக்கான சைக்கிள் நிறுத்துமிடங்கள், உள்ளூர்ப் பாரம்பரியக் கலைப்படைப்புகள், சிறப்புத் தேவைகளுடன்கூடிய பயணிகளுக்கு உதவும் பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்