டாக்சி-கார் மோதியதில் நடந்து சென்ற மூவர் காயம்

1 mins read
0c32a221-9d57-4da8-9a93-8104f2b32f05
டாக்சியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த நடையர்களுக்கு உதவும் வழிப்போக்கர்கள். - படங்கள்: ஷின் மின்

கார்மீது மோதிய டாக்சி திசைதிரும்பி, பீச் ரோடு சிட்டி கேட் கடைத்தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள நடைவழியில் சென்ற மூவர்மீது மோதியது.

இவ்விபத்து வியாழக்கிழமை நண்பகலில் நிகழ்ந்தது.

ஜாலான் சுல்தான் - மின்டோ சாலை சந்திப்பில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து நண்பகல் 12 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்தில் காயமுற்ற, 32 முதல் 58 வயதிற்குட்பட்ட நடையர்கள் மூவரும் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இலேசாகக் காயமுற்ற இன்னொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.

டாக்சி ஓட்டுநர் இலேசான காயமடைந்தார் என்றும் விபத்து நிகழ்ந்தபோது அவ்வாகனத்தில் பயணிகள் ஒருவரும் இல்லை என்றும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

விபத்து தொடர்பில் 37 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

காயமடைந்தவர்களுக்கு வழிப்போக்கர்கள் சிலர் உதவியதைக் காணொளி காட்டியதாக ஷின் மின் நாளிதழ் செய்தி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்