தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் கடத்திய சந்தேகத்தில் 17 வயதுப் பெண் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
5cfcf7f3-179b-4eed-94cc-21aaf19c0012
எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்தாலோ விற்றாலோ விநியோகித்தாலோ கடும் தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் சாதனங்களைக் கடத்திய சந்தேகத்தின் தொடர்பில் 17 வயதுப் பெண் உட்பட மூவர் மீது சுகாதார அறிவியல் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. அதுகுறித்து ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 4) அறிக்கையொன்றை வெளியிட்டது.

ஆடவர் ஒருவர் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டைப் புழங்கியதாக ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) சந்தேகித்தது. அவருக்கு மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாக நம்பப்பட்ட இருவர் ஆணைய அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களில் ஒருவர் 23 வயது வெர்னெட் ஹெங் சுய் டெங், மற்றவர் 17 வயதுப் பெண் என்று அறிக்கை குறிப்பிட்டது.

எட்டோமிடேட் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் 64 மின்சிகரெட்டுகளும் அவை சம்பந்தப்பட்ட மற்றச் சாதனங்களும் ஹெங்கின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. அத்தகைய 16 சாதனங்கள் அவர் வீட்டிலிருந்தன.

அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் 27 வயது அமிர் ‌ஷா பிடிபட்டார். டெலிகிராம் செயலி வழியாகப் பதின்ம வயதினருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட் சாதனங்களை அவர் விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவரின் வீட்டிலிருந்து நான்கு மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான மற்றச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சாதனங்களில் எட்டோமிடேட் இருக்கிறதா என்பது சோதிக்கப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன. எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டைப் புழங்கிய இருவருக்குச் சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்தாலோ விற்றாலோ விநியோகித்தாலோ கடும் தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. இறக்குமதி செய்பவருக்கு ஐந்திலிருந்து 15 பிரம்படிகளோடு மூன்றிலிருந்து 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். விற்பவருக்கும் விநியோகிப்பவருக்கும் இரண்டுமுதல் ஐந்து பிரம்படிகளுடன் இரண்டுமுதல் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்