ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள லியாட் டவர்சில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) மாலை 4 மணியளவில் அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என்று தெரிகிறது.
சம்பவம் தொடர்பில் உதவி கேட்டு மாலை 4 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காயமடைந்தோரில் இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மற்றொருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
லியாட் டவர்சின் முதல் மாடியில் அமைந்துள்ள ‘ஸ்வர்ல் லவர்’ எனும் ‘அசாய்’ (Acai) கடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேற்கூரை இடிந்து கிடப்பதைச் சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் காட்டுகின்றன.
சம்பவம் குறித்துத் தகவல் பகிர அந்தக் கடையின் ஊழியர் மறுத்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது கணவர் வெளியே இழுத்ததாகவும் மற்றொரு சிறுமிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
அங்கிருந்த சிலர் மேற்கூரையின் சிதைந்த பாகங்களை மேலே தூக்க முயன்றதைக் காண முடிந்ததாக அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்த மேல்விவரங்களுக்கு கட்டட, கட்டுமான ஆணையத்தையும் லியாட் டவர்ஸ் நிர்வாகத்தையும் அணுகியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.