தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் கால்வாயில் சிற்றுந்து விழுந்ததில் 14 வயதுச் சிறுமி உட்பட மூவர் காயம்

2 mins read
e2f4809e-5251-4391-8f6a-c7b51de05d20
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படங்களில், கால்வாய்க்கு நடுவில் வேன் இருந்தது தெரிந்தது. சிற்றுந்தின் முன்பகுதி சேதமுற்றிருந்தது. அதற்கு அருகில் சில ஊழியர்கள் இருப்பதையும் காண முடிந்தது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்ட்/ஃபேஸ்புக்

புக்கிட் பாஞ்சாங்கில் செஞ்சா-கேஷு சமூக நிலையத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) பிற்பகல் ஒரு சிற்றுந்து கால்வாய் ஒன்றில் விழுந்ததில் மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

புக்கிட் பாஞ்சாங் சாலைக்கும் புக்கிட் பாஞ்சாங் ரிங் சாலைக்கும் இடையிலான சந்திப்பு அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 1.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அந்த விபத்தில் ஒரு பேருந்தும் ஒரு சிற்றுந்தும் சிக்கியதாகக் காவல்துறை கூறியது.

“குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஒரு பெரிய கால்வாய் பகுதியில் சிற்றுந்து ஒன்று இருந்ததைக் கண்டனர்,” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

கால்வாய்க்குள் இறங்குவதற்கு குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் ஏணியைப் பயன்படுத்தினர். அதன் பிறகு, மூன்று பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர்.

சிற்றுந்தை ஓட்டிய 68 வயது ஆடவரும் அதில் பயணம் செய்த 14, 53 வயதுடைய இரு பெண்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்களில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படங்களில், கால்வாய்க்கு நடுவில் சிற்றுந்து இருந்தது தெரிந்தது. அதன் முன்பகுதி சேதமுற்றிருந்தது.

அதற்கு அருகில் சில ஊழியர்கள் இருந்ததையும் காண முடிந்தது.

அந்தச் சிற்றுந்து, வெஸ்ட் கோஸ்ட் சாலைக்கு அருகே ஜுபிளி சாலையில் உள்ள ‘இன்டர்நேஷனல் கம்யூனிட்டி ஸ்கூல்’ என்ற அனைத்துலகப் பள்ளிக்குச் சொந்தமானது என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்