தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபோர்ப்ஸ் ஆக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சிங்கப்பூரர்கள் மூவர்

2 mins read
e6403f3a-aa44-4fbf-ac24-dcfa1b9f9cbb
(இடமிருந்து) ஹெலன் வோங், ஹோ சிங், ஜெனி லீ. - படங்கள்: மதர்‌ஷிப் / இணையம்

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்கள் மூவர், ஃபோர்ப்ஸ் (Forbes) ஊடகத்தின் ‘உலகின் ஆக சக்தி வாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தெமாசெக் அறக்கட்டளை தலைவர் ஹோ சிங், ஓசிபிசி தலைமை நிர்வாக அதிகாரி ஹெலன் வோங், புதிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் ‘வெஞ்சர் கேப்பிட்டல்’ நிறுவனமான கிரேனைட் ஏ‌ஷியாவின் (Granite Asia) மூத்த நிர்வாகப் பங்காளி ஜெனி லீ ஆகியோர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரர்கள் மூவர்.

திருவாட்டி ஹோ, இவ்வாண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் 32வது இடத்தைப் பிடித்துள்ளார். 71 வது ஹோ 2023ல் 33வது இடத்தில் இருந்தார்.

அவர், முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் மனைவி என்பதையும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டது.

ஃபோர்ப்ஸ் ‘உலகின் ஆக சக்திவாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார் திருவாட்டி வோங். இவ்வாண்டுக்கான பட்டியலில் அவர் 59வது இடத்தைப் பிடித்துள்ளார்.

40 ஆண்டுகளாக வங்கிப் பணிகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டு அவர் ஓசிபிசியை வழிநடத்துவதாக ஃபோர்ப்ஸ் சுட்டியது.

திருவாட்டி வோங், 2021ஆம் ஆண்டு ஓசிபிசி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2023ல் அவர் அந்த வங்கியின் நிர்வாகக் குழு இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

திருவாட்டி வோங், முன்னதாக எச்எஸ்பிசி வங்கியில் 27 ஆண்டுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ‘உலகின் ஆக சக்திவாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலில் 97வது இடத்தில் வந்த திருவாட்டி லீ, இவ்வாண்டு 96வது இடத்துக்கு முன்னேறினார்.

கிரேனைட் ஏ‌ஷியா நிறுவனத்தில் அவர், கல்வி தொடர்பான தொழில்நுட்பம், நிதி தொடர்பான தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு பிரிவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகளும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திருவாட்டி உர்சுலா வொன் டெர் லேயன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.

குறிப்புச் சொற்கள்