ஈசூனில் தடம்புரண்ட குப்பை லாரி, ஓட்டுநர் உட்பட மூவர் மருத்துவமனையில்

ஈசூனில் தடம்புரண்ட குப்பை லாரி, ஓட்டுநர் உட்பட மூவர் மருத்துவமனையில்

படம்: கம்ப்ளெய்ன்ட் சிங்கப்பூர்/ஃபேஸ்புக்

05 Jul 2026 - 6:21 pm

1 mins read

ஈசூனில் குப்பை லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும் அவருடன் பயணித்த இருவரும் காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செம்பவாங் சாலை - ஈசூன் அவென்யூ 7 சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நிகழ்ந்த சாலை விபத்துக் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காலை 11.20 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான லாரி அந்தச் சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி, சாலையில் ஒருபுறமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. 47 வயது லாரி ஓட்டுநரும் அவருடன் பயணித்த 47, 60 வயதுகளில் உள்ள இரு பயணிகளும் காயமடைந்தனர்.

மூவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விபத்து தொடர்பான காணொளியில், குப்பை லாரி சாலையில் கவிழ்ந்து கிடப்பதும், அதற்கு அருகிலிருந்த மின்விளக்குக் கம்பம் வளைந்திருப்பதும் தெரிகிறது.

விபத்து நடந்த இடத்தில் ஒரே மாதிரியான நீல நிற ஆடைகளை அணிந்திருந்த மூவருக்கு மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளிக்கும் புகைப்படங்களும் வலம் வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சாலைவிபத்துகுப்பைலாரிஓட்டுநர்விபத்துமருத்துவமனை