சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையிலிருந்து இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் (ஏப்ரல் 1) தெரிவித்தது.
சுமத்ராவில் ஏற்படும் புயலால் ஓரிரு காலைப் பொழுதில் கனத்த மழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வகம் சொன்னது.
ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் சராசரியைவிட அதிகமான மழை பெய்யக்கூடும். அன்றாட வெப்பநிலை அதிகபட்சம் 33 டிகிரி செல்சியசிலிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நாள்களில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
மார்ச் மாதத்தின் பிற்பாதியில் அதிக மழை பதிவானது. மார்ச் 19லிருந்து 20ஆம் தேதிவரை தென் சீனக் கடலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூரிலும் சுற்றுவட்டாரங்களிலும் கடுமையான மழை பெய்தது.
மார்ச்20 அன்று பெருமழையின்போது ஆகக் குறைவாக வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.