சிங்கப்பூரில் குறைந்தது 12 டிக்டாக் ஊழியர்கள் உடனடியாக வேலை இழந்துள்ளனர். நிறுவனம் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்காகச் செயல்பாடுகளை மாற்றி அமைத்ததால் உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை அறிகிறது.
அதன் உள்ளடக்க நம்பகத்தன்மை, பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு உள் மறுசீரமைப்பு பற்றி பிப்ரவரி 20ஆம் தேதி கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஆசியா-பசிபிக், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஊழியரணிகளை ஆட்குறைப்பு பாதித்துள்ளதாக பணிநீக்கம் பற்றி நன்கு அறிந்த ஓர் ஆதாரம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை அப்பத்திரிகை பார்த்தது. ‘உள்ளடக்க நம்பகத்தன்மை, பாதுகாப்புப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கம், பல மாத கால கவனமான பரிசீலனைக்குப் பின்னர் இடம்பெற்றது. செயல்பாட்டுத் திறனுக்கும் வணிகத் தேவைகளுடன் சிறந்த முறையில் ஒத்துப்போகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்று அந்த மின்னஞ்சல் குறிப்பிட்டது.
மின்னஞ்சலைப் பெற்ற சில ஊழியர்கள் வேலையில் நீடித்தனர். மற்றவர்களுக்கு பிப்ரவரி 20 அன்று வேலைகள் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மின்னஞ்சல் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்ட ன
உலகளவில் 40,000க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் டிக்டாக் உள்ளடக்க நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் கையாளுகின்றனர் என்று டிக்டாக் தலைமை நிர்வாகி செவ் ஷூ ஸி ஜனவரி 2024ல் அமெரிக்க செனட் நீதிக் குழுவின் முன் குழந்தைகளுக்கு சமூக ஊடகம் தீங்கு விளைவிப்பது குறித்த விவாதத்தின்போது கூறினார்.
உள்ளடக்க நம்பகத்தன்மை, பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் இந்த 40,000 ஊழியர்களில் எத்தனை பேர் சிங்கப்பூர்வாசிகள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிப்ரவரி 20 ஆட்குறைப்பு மற்ற துறைகளைப் பாதித்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ் டிக்டாக்கைத் தொடர்புகொண்டுள்ளது.