பள்ளிப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள், கூடுதல் வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்க விண்ணப்பிக்கலாம். இத்துறையில் போதுமான உள்ளூர் ஓட்டுநர்கள் இல்லாததால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கல்வி அமைச்சின் இத்திட்டம் முதலில் இவ்வாண்டு இறுதியில் நிறைவடையவிருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பள்ளிகளுக்குப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூடுதல் வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கலாம். அந்த வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு ஈராண்டுகளுக்கான வேலை அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
ஒரு நிறுவனம் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும் என்பதை மனிதவள அமைச்சு தீர்மானிக்கும். இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கக் கிட்டத்தட்ட 42 பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பள்ளிப் பேருந்துப் பற்றாக்குறை 2023ஆம் ஆண்டு மிகவும் மோசமானதைத் தொடர்ந்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. வேலையிலிருந்து விலகியோரின் இடத்தை நிரப்ப புதிய ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்க முடியாமல் போனதால் பல நிறுவனங்கள் திடீரென எதிர்பாரா விதமாகப் பள்ளிகளுக்குச் சேவை வழங்குவதை நிறுத்திக்கொண்டன.

