தோ பாயோவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) தீ விபத்து நேர்ந்ததற்கு மறுநாள் காலையில் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலைச் சேர்ந்த தொண்டூழியர்களும் ஊழியர்களும் ஒன்றுதிரண்டு, உணவு சமைத்து விநியோகம் செய்தனர்.
லோரோங் 8 புளோக் 229ன் 10வது மாடியில் மூண்ட நெருப்புக்கு 70 வயது செரில் சானின் வீடு இரையானதுடன் வேறு பல வீடுகளில் தண்ணீர், மின்சார விநியோகம் தடைப்பட்டன.
செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் பாதிக்கப்பட்ட இடத்திற்குத் தாம் சென்றதை அடுத்து தாமும் ஆலயத்தினரும் உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ததாக துணைத் தலைவர் தினேஷ் நடராஜன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“மக்கள் கழகம், வசிப்போர் கட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நபர்களுடன் நான் உரையாடினேன். மின்சாரம், தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்கு அதுவரையில் திரும்பாததால் காலை உணவு வழங்க நாங்கள் முன்வந்தோம்,” என்று அவர் கூறினார்.
தோ பாயோ ஈஸ்ட் சமூகச் சேவைக்கு அருகே அமைந்துள்ள கோயில், அண்மையில் சமூக மன்றத்துடன் புதிதாக உணவுத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
காம்கேர் பயனாளர்களுக்காக வாரந்தோறும் தரப்படும் அன்னதானத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உடனடி விநியோகம் அமைந்ததாகவும் திரு தினேஷ் கூறினார்.
அவர்கள் கிட்டத்தட்ட 300 பேருக்கான மீ கோரெங், மீ ஹூன் கோரெங் உணவைச் சமைத்து தண்ணீருடன் பரிமாறினர். பொழுது விடிவதற்குள் கோயில் ஊழியர்கள், ஆலயச் செயற்குழு உறுப்பினர்கள், தொண்டூழியர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட புளோக்கின் இல்லங்களில் உணவுப் பொட்டலங்களைக் கொண்டுசேர்த்தனர்.
சக ஆலயத்தினர் மனமுவந்து செய்த இத்தொண்டைக் கண்டு மகிழ்வதாக ஆலயத்தின் துணைத் தலைவராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற திரு தினேஷ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிறப்பு வழிபாடுகள் நிறைந்த ஆடி மாதத்தில் எங்கள் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. ஆயினும் அவர்கள் தயங்காமல் காலையில் எழுந்து, சமைத்து எந்தவித அலுப்பும் இல்லாமல் எல்லாவற்றையும் பொட்டலமிட்டனர்,” என்றார் திரு தினேஷ்.
வைராவிமட கோயிலுக்கு அருகே அந்தத் தொண்டைப் பாராட்டி பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், பதிவு ஒன்றைச் சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
மற்ற பல்வேறு அமைப்புகளும் படுக்கைகள், அன்றாடத் தேவைக்கான பொருள்கள், துணிமணிகள், தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கியதையும் அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்புப் பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும் ஆலயம், வட்டாரவாசிகளுடன் இணைந்து அன்றாட வாழ்க்கையை அனுபவிப்பதாகத் திரு தினேஷ் கூறினார்.
“இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என வேண்டுகிறோம். ஆனால் இத்தகைய துயரமான சம்பவத்துக்காக நாம் அனைவரும் ஒன்றுகூடியதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.