இடிந்துபோன தோ பாயோ கிடங்குத் தரை; கட்டமைப்பில் பாதிப்பில்லை

2 mins read
bbd656a4-f15b-42a7-9514-7372ef2f3736
சம்பவத்தில் சிறார் இருவர் உட்பட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை / ஃபேஸ்புக்

தோ பாயோ வட்டாரத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 28) தரை இடிந்துபோனது.

அதனைத் தொடர்ந்து அந்தக் கிடங்கு அமைந்துள்ள கட்டடத்தின் கட்டமைப்பு பாதுகாப்பாக இருக்கிறது என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.

“கிடங்கின் எஃகு தளம், பொருள்களை அடுக்குவதற்கான அடுக்கு அமைப்பு (racking system) ஆகியவற்றின் அங்கம் இடிந்து விழுந்ததில் கட்டடத்தின் கட்டமைப்புக்குப் பாதிப்பு ஏற்படவில்லை,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு ஆணையம் அதனிடம் தெரிவித்தது.

அச்சம்பவத்தில் சிறார் இருவர் உட்பட நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தோ பாயோ தொழில்துறைப் பூங்காவில் உள்ள சம்பந்தப்பட்ட கிடங்கை ஏஎச்டி கார்ப்பெட் அண்ட் ஃபுளோரிங் (AHT Carpet and Flooring) நிறுவனம் வாடகைக்குப் பயன்படுத்தி வருகிறது. தங்களின் தரை விரிப்புகளை வைக்க அந்நிறுவனம் கிடங்கின் ‘மெஸனீன்’ (mezzanine) எனும் இடைத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறது. அந்த இடைத்தளப் பகுதியே இடிந்து விழுந்தது.

தனது நிறுவனம் அக்கிடங்கை ஓராண்டுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருவதாக அதன் நிறுவனர் முகம்மது ஹைருல், 45, தொலைபேசிவழி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பெரியவர்கள் இருவர் திரு ஹைருலின் நண்பர்கள் ஆவர். அவ்விருவரில் ஒருவர், விபத்தில் சிக்கிய சிறார் இருவரின் தாயாவார்.

நால்வரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சீரான நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நேர்ந்த கிடங்கு 11 தோ பாயோ தொழில்துறைப் பூங்காவில் அமைந்துள்ளது. அப்பகுதி, ஜேடிசி கார்ப்பரே‌ஷன் அமைப்புக்குச் சொந்தமானது.

விசாரணை மேற்கொள்ளும் அமைப்புடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக ஜேடிசி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. கட்டட, கட்டுமான ஆணையமும் மனிதவள அமைச்சும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவ்விரண்டின் பேச்சாளர்களும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்