6,000 வீடுகள், பல்வேறு வசதிகளுடன் தோ பாயோ வெஸ்ட் உருமாறுகிறது

6,000 வீடுகள், பல்வேறு வசதிகளுடன் தோ பாயோ வெஸ்ட் உருமாறுகிறது

படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

31 Oct 2026 - 2:43 pm

2 mins read

சிங்கப்பூரின் நீண்ட காலத்துக்கு முந்தைய வீடமைப்பு வளர்ச்சிக் கழக நகரங்களில் ஒன்றான தோ பாயோ தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது. 

அதன் அடுத்த அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் தோ பாயோ வெஸ்ட் வட்டாரம் புதுப்பொலிவுடன் உருமாற்றம் பெறுகிறது. அதற்கான பெருந்திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.

பெருந்திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் சனிக்கிழமை (அக்டோபர் 31) ‘தோ பாயோ ஹப்’ கட்டடத்தில் நடைபெற்ற ‘தோ பாயோ வெஸ்ட்’ பெருந்திட்டக் கண்காட்சித் தொடக்க நிகழ்வில்  அறிவித்தார். 

அடுத்த பத்தாண்டுகளில் ‘தோ பாயோ வெஸ்ட்’ படிப்படியாக மேம்படுத்தப்படும். அதிகமான பொது வீடமைப்பு, சில தனியார் வீடமைப்புகள் உட்பட 6,000க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் அந்த வட்டாரத்தில் கட்டப்படும்.

தோ பாயோ சென்ட்ரலில் உள்ள தற்போதைய நகர மையத்திற்குத் துணைபுரியும் வகையில், புதிய வீடுகள், வணிக, சமூக, பொழுதுபோக்கு வசதிகள் ஒன்றிணைந்து தோ பாயோவுக்கான இரண்டாவது மையப்பகுதியாக ‘தோ பாயோ வெஸ்ட்’ உருவெடுக்கும். 

குடியிருப்பாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல்வேறு கட்டச் சீரமைப்புகளை தோ பாயோ கண்டுள்ளது.

தற்போதைய ‘தோ பாயோ ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்’ அடுத்த முக்கிய மேம்பாடாக உருவெடுத்து வருகிறது. 2030க்குள் விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக வசதிகளை ஒரே கூரையின் கீழ் அந்தத் திட்டம் கொண்டுவரும். 

மலைச்சரிவுப் பூங்கா

மலைப்பாங்கான நிலப்பரப்பால் ஈர்க்கப்பட்டு, தோ பாயோ வெஸ்ட் பகுதியை ஒரு மலைச்சரிவுப் பூங்காக் குடியிருப்பாக இப்பெருந்திட்டம் சித்திரிக்கிறது. 

மேலும், மத்திய பசுமைப் பள்ளத்தாக்கு, தோ பாயோ வெஸ்ட் வழியாகச் சென்று, வீடுகளை கால்டிகாட் எம்ஆர்டி நிலையம், புதிய வணிக வளாகம் போன்ற வசதிகளுடன் இணைக்கும் ஒரு பசுமைப் பாதையை உருவாக்கும். 

மத்திய பசுமைப் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லச் செல்ல கட்டடங்களின் உயரம் குறைந்து காணப்படும். 

ஒருங்கிணைந்த பயன்பாட்டு மேம்பாட்டின் முன்பகுதியில் ஒரு திறந்தவெளி வளாகம் அமைக்கப்பட்டு, அது புதிதாக வரவிருக்கும் 1.2 ஹெக்டர் நலவாழ்வுப் பூங்காவுடன் இணைக்கப்படும். 

இது அனைத்து வயதினரும் ஒன்றுகூடவும் உடற்பயிற்சி செய்யவும் ஓய்வெடுக்கவும் ஒரு வரவேற்பிடமாக இருக்கும். சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் இயற்கைச் சூழலுடனான  விளையாட்டுத் திடல்களை எதிர்பார்க்கலாம்.

முதல் பிடிஓ திட்டம்

தோ பாயோ வெஸ்ட் பெருந்திட்டத்தின் கீழான முதல் பிடிஓ திட்டமான ‘தோ பாயோ ஹில்சைட்’ இந்த நவம்பர் மாத பிடிஓ விற்பனை நடவடிக்கையில் அறிமுகம் காணும்.

அந்த பிடிஓ திட்டப்படி, கால்டிகாட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் ஏறத்தாழ 1,600 வீடுகள் கட்டப்படும். 

அடுத்த பத்தாண்டுகளில் தோ பாயோ வெஸ்ட் படிப்படியாக உருப்பெறும்போது, புதிய வீடுகள், வசதிகள் மற்றும் சமூகக் கூடங்கள் தற்போதைய நகரத்தை மேலும் மெருகூட்டி, குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கும், மகிழ்வதற்கும், ஒன்றிணைவதற்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும். 

குறிப்புச் சொற்கள்