அக்கறைமிக்க சமூகத்தை உருவாக்குவது அவசியம்: ரஹாயு மஹ்ஸாம்

3 mins read
6ebeb9da-46a7-4a65-84b9-afa9a9a0779e
‘ஒன்பீப்பள்.எஸ்ஜி மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவன’ (OPMUN) மாநாட்டின் தொடக்கவிழாவில் இளையர்களுடன் உரையாடும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (இடது). அவருடன், நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ரோசலின் டான். - படம்: சாவ் பாவ்

இன, சமயம் சார்ந்த உள்ளூர் தேசியச் சவால்களை மையப்படுத்தும் ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்’ (ஓப்மன்/OnePeople.sg Model United Nations) 11வது மாநாடு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) தொடங்கியது.

இன, சமய நல்லிணக்கத்துக்கான அடுத்த தலைமுறைக் காப்பாளர்களை வளர்க்கும் வகையில் இளையர்களே இளையர்களுக்காக இத்திட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். 2015ல் 65 பங்கேற்பாளர்களுடன் தொடங்கிய மாநாடு, இன்று கிட்டத்தட்ட 300 மாணவர்கள் என விரிவடைந்துள்ளது.

‘ஒன்றாக, புதிய யுகத்தினுள்’ என்பது இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருள்.

‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவன மாநாட்டின் தொடக்கவிழாவில் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாமுடன் இளையர்களும் விருந்தினர்களும்.
‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவன மாநாட்டின் தொடக்கவிழாவில் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாமுடன் இளையர்களும் விருந்தினர்களும். - படம்: சாவ் பாவ்

சங் செங் ஹை (மைய) பள்ளியில் நடந்த தொடக்க விழாவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்வில் அவரும் உயர்நிலை, உயர்கல்வி நிலைய மாணவர்களும் பங்குகொண்ட கேள்வி-பதில் அங்கம் இடம்பெற்றது.

இன்று நம் சமூகத்தில் நிலவும் இன நல்லிணக்கத்துக்கு வித்திட்டது நம் தேசத் தந்தைகளின் கடினமான முடிவுகளே என்றார் திருவாட்டி ரஹாயு.

“சீன, மலாய் அல்லது இந்தியர் என்று தனிப்பட்ட சமூகத்தை உருவாக்காமல் மக்கள் செழிப்புறும் பல்லினச் சமூகத்தை உருவாக்கவேண்டும் என்ற நெறியை நம் தலைவர்கள் அன்று விதைத்தனர். அதற்கான கொள்கைகளையும் அமைத்தனர்,” என்ற துணையமைச்சர், அதற்குச் சிறுபான்மை உரிமைகளுக்கான அதிபர் மன்றம், இன ஒருங்கிணைப்புத் திட்டம், அனைத்துப் பின்னணிகளைச் சார்ந்தவர்களையும் உள்ளடக்கும் பள்ளிகள் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.

இன, சமய உரையாடல்களில் ஈடுபடுவதில் இளையர்கள் திறன்மிக்கவர்கள் என்று திருவாட்டி ரஹாயு பாராட்டினார்.

ஆயினும், இன்றைய மின்னிலக்க உலகினால் மெய்யுலகை மறப்பது, தலைமுறைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழுவது, சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சிசெய்யும் வெளிநாட்டுத் தலையீடு போன்ற சவால்கள் நிலவுவதை அவர் சுட்டினார்.

‘ஒன்பீப்பல்.எஸ்ஜி மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவன’ (OPMUN) மாநாட்டின் தொடக்கவிழாவில் இளையர்களுடன் உரையாடும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (இடது).
‘ஒன்பீப்பல்.எஸ்ஜி மாதிரி ஐக்கிய நாட்டு நிறுவன’ (OPMUN) மாநாட்டின் தொடக்கவிழாவில் இளையர்களுடன் உரையாடும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (இடது). - படம்: சாவ்பாவ்

சகிப்புத்தன்மையும் இன நல்லிணக்கமும்

கடந்த 2023ஆம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் சிங்கப்பூரில் அதிக சகிப்புத்தன்மை நிலவுவதாக குறிப்பிட்டிருப்பதைத் திருவாட்டி ரஹாயு சுட்டிக்காட்டினார்.

“இது மிகவும் நல்ல செய்தி. ஏனெனில், 1964 இனக் கலவரங்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்,” என்றார் அவர்.

அண்மையில் பள்ளிவாசலுக்கு ஒருவர் பன்றி இறைச்சியை அனுப்பியபோது மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இனம் சார்ந்த பிரச்சினைகளைச் சிங்கப்பூர் சமூகம் கையாளும் விதம் எவ்வளவு மாறியுள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், அதற்கென நாம் சகிப்புத்தன்மைமிக்க நாடாக இருப்பதோடு நிம்மதியடைந்துவிடமுடியாது. மக்கள் ஒவ்வொருவர் பற்றியும் அக்கறை கொண்டுள்ள சமூகத்தை நாம் உருவாக்கவேண்டும்,” என்று துணையமைச்சர் வலியுறுத்தினார்.

“வேலையிடத்திலோ மற்ற சூழல்களிலோ சிறுபான்மையினர் தங்கள்மீது பாகுபாடு காட்டப்படுவதாகக் கருதலாம்; அது சொந்த உணர்ச்சியாகவும் இருக்கலாம்; சில சமயம் உண்மையாகவும் இருக்கலாம்,” என்ற திருவாட்டி ரஹாயு, அதற்கான தீர்வையும் பரிந்துரைத்தார்.

“சிறுபான்மையினரே, எதற்கெடுத்தாலும் மனம் புண்பட்டுவிடக்கூடாது. உங்களுக்கு என்ன தெரியும் என்றே மற்றவர்க்குத் தெரியாத நிலையில், நீங்கள்தான் பிறருக்கு உங்களுக்குத் தெரிந்ததைத் தெரியப்படுத்தவேண்டும். பெரும்பான்மையினரே, உங்களுக்கு வழக்கமான ஒன்று, பிறருக்கு வழக்கமானதாக இல்லாமல் இருக்கலாம். அதை நினைவில்கொள்ளுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

“நம்மால் நம் சொந்த கருத்தைச் சொல்ல முடியவில்லையே என சிலருக்குத் தோன்றலாம். உங்கள் கருத்து இணையத்தில் பிறருக்கோ சமூகத்தின் கட்டமைப்புக்கோ தீமை விளைவிக்கும்போது நாம் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது,” என்றார் திருவாட்டி ரஹாயு.

“சமூகம் மாறுகிறது. நாம் எதை ஏற்றுக்கொள்கிறோம் என்பதிலும் தொடர்ந்து மாற்றம் தேவை. அதனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அதே சமயம் பல்லினச் சமூகத்தின் நெறிகளைக் கட்டிக்காத்தபடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.

டிசம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் மாநாட்டில் மாணவர்கள் 12 புதிய தலைப்புகளில் தங்கள் கொள்கைப் பரிந்துரைகளை முன்வைத்து விவாதிப்பர்.

“அன்றாட வாழ்வு பற்றிய உரையாடல்கள் முக்கியம். ஆனால், அதனோடு நின்றுவிடாமல், அதைச் செயல்படுத்தவும் முனைய வேண்டும். நம் சமூகத்திலும் இணையத்திலும் வெவ்வேறு தலைமுறையினரிடத்திலும் அதைக் கொண்டுசெல்லவேண்டும்,” என இளையர்களிடம் துணையமைச்சர் ரஹாயு கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்