பரபரப்பான சாலையிலிருந்து நன்னீர் ஆமையை மீட்ட வாகனவோட்டிகள்

2 mins read
85750820-8aa0-4761-8094-dd407259a9f8
அங் மோ கியோ அவென்யு 5ல் சாலையைக் கடக்க நன்னீர் ஆமை முயன்றது.  - படம்: சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடன்.காம் 

அங் மோ கியோ அவென்யு 5ல் சனிக்கிழமை (மார்ச் 22) பரபரப்பான சாலையைக் கடக்க முயன்ற நன்னீர் ஆமை ஒன்றை வாகனமோட்டிகள் இருவர் மீட்டனர்.

சாலையைக் கடப்பதற்கான இடம் ஒன்றுக்கு முன், மூன்று தடங்கள் கொண்ட அச்சாலையின் வலது தடத்தில் அந்த ஆமை கடந்து செல்வதை, அருகில் இருந்த வாகனத்தில் இருந்த கண்காணிப்புக் கருவி பதிவு செய்தது.

அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி, சாலைத் தடுப்புக்குப் பக்கத்தில், அந்த ஆமைக்கு கிட்டத்தட்ட 30 சென்டிமீட்டர் முன்னால் வண்டியை நிறுத்துவது, அக்கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சி காட்டியது. அதற்கு இடது தடத்தில் லாரி ஒன்று மெதுவாக வந்து நின்றது.

மோட்டார்சைக்கிளோட்டியும் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தவரும் வண்டியிலிருந்து இறங்கினர்.

இரு கைகளால் ஆமையைப் பத்திரமாக மீட்ட அந்த மோட்டார்சைக்கிளோட்டி, ‘லாலாமூவ்’ ஒட்டுவில்லையைக் கொண்ட அந்த லாரியில் வைத்துவிட்டு, சுற்றியுள்ள மற்ற வாகனவோட்டிகளிடம் கைகாட்டிவிட்டுச் சென்றார்.

அக்காணொளி, சிங்கப்பூர் ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. வாகனவோட்டிகளின் இந்த நற்செயல், இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

வேறோரு சம்பவத்தில், சில குரங்குகள் சாலையைக் கூட்டமாகக் கடந்து கொண்டிருந்தபோது ஒரு குரங்கு, அவ்வழியாக வந்த காரால் மோதப்பட்டதை சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடன்.காம் ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 20ல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்டியது.

மற்றொரு சம்பவத்தில், அப்பர் பியர்ஸ் ரெசர்வோர் பார்க்கிற்கு அருகிலுள்ள சிறிய வேன் ஒன்று குட்டிக் குரங்கு ஒன்றின்மீது ஏறிய ‘கொடூரச் சம்பவத்தை’ கண்டதாக இணையவாசி ஒருவர் அதே ஃபேஸ்புப் பக்கத்தில் மார்ச் 22ல் பதிவிட்டார்.

அதிகமான வனவிலங்குகள் சாலைகளைக் கடக்கும் மண்டாய் போன்ற வட்டாரங்களில் வாகனவோட்டிகள் விழிப்புடன் இருக்கும்படி தேசிய பூங்காக் கழகம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.

குறிப்புச் சொற்கள்