சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் செயல்பாட்டுக்காக 18 நகர மன்றங்களுக்கு மொத்தம் 1.8 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்படவிருப்பதாக தேசிய வளர்க்கி அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 29) தெரிவித்தது.
2011ஆம் நிதியாண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த நகர மன்றங்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதால் விநியோகிக்கப்பட்ட தொகையில் ஏற்பட்ட குறைபாட்டைச் சரிசெய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நிலைமையைச் சீராக்க சம்பந்தப்பட்ட நகர மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும் தொகையின் அளவு மாறுபடும் என்று அமைச்சு தெரிவித்தது. ஒவ்வொரு நகர மன்றமும் பெறும் தொகை 22,000லிருந்து 383,000 வெள்ளிக்கு இடைப்பட்டிருக்கும் என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
குடியிருப்பு வட்டார மேம்பாட்டுச் செலவு, செயல்பாட்டுத் தேவைகள், குடியிருப்பாளர்களின் செலவைக் குறைப்பது ஆகியவற்றுக்காக தேசிய வளர்ச்சி அமைச்சு ஆண்டுதோறும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் நிதியை வழங்கி வருகிறது. நாலறை மற்றும் அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. சிறிய வீடுகளுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது.
நகர மன்றச் செயல்பாடுகளுக்காக தேசிய வளர்ச்சி அமைச்சு ஆண்டுதோறும் 280 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான மானியங்களை வழங்கி வருகிறது. அவற்றில் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகள் மானியமும் அடங்கும்.
மின்தூக்கிப் பழுதுபார்ப்பு மானியம், பொருள், சேவை வரிச் சமாளிப்பு மானியம் போன்றவை இதர மானியங்களில் அடங்கும்.
மானியத் தொகையைக் கணக்கிடும் முறையைத் தங்களுக்குள் மறுஆய்வு செய்தபோது வீவக குறைபாட்டைக் கண்டறிந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது. நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பு வீடுகளுக்கான புள்ளிவிவரங்களைக் கொண்டு மானியத் தொகை கணக்கிடப்படுகிறது.
முந்தைய நிதியாண்டுப் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் இடம்பெறும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு மானியத் தொகை மாற்றப்பட்டு வருகிறது. குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான மானியத் தொகையை, வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் தேசிய வளர்ச்சி அமைச்சும் வீவகவும் சம்பந்தப்பட்ட நகர மன்றங்களுக்கு வழங்கும்.
தொடர்புடைய செய்திகள்
பாசிர் ரிஸ்-சாங்கி நகர மன்றத்துக்கான மானியத்தில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

