முழுமைத் தற்காப்புப் படையின் உணவு மீள்திறன் திட்டம் (Total Defence food resilience programme) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘சோட்டா’ எனும் சிங்கப்பூர்க் கலைப் பள்ளியில் நேர்ந்த நச்சுணவுச் சம்பவம் குறித்த விசாரணை முடியும் வரை இத்திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முழுமைத் தற்காப்புப் படை நடவடிக்கைகளின்போது வழங்கப்பட்ட உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவை (ready-to-eat meals) சாப்பிட்ட பிறகு சிங்கப்பூர்க் கலைப் பள்ளி மாணவர்கள் 20 பேர் புதன்கிழமை (பிப்ரவரி 19) நச்சுணவால் ஏற்படும் கேஸ்ட்ரோஎன்ட்ரைட்டிஸ் (gastroenteritis) பிரச்சினைக்கு ஆளாயினர் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 20) சிங்கப்பூர் உணவு அமைப்பு, கல்வி அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, உணவுத் தீர்வுகளை வழங்கும் சேட்ஸ் அமைப்பு ஆகியவை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் கேஸ்ட்ரோஎன்ட்ரைட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு மீள்திறன் தயார்நிலை நிகழ்வின்போது சிங்கப்பூர் கலைப் பள்ளி மாணவர்கள் உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவை உண்டனர். பள்ளிகளில் முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி இடம்பெற்ற நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக அந்த உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
“யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. ஆசிரியர்கள், மாணவர்களின் உடல்நலன் குறித்து தெரிந்துகொண்டனர். தொடர்ந்து மாணவர் நலனை விசாரிப்பர். மன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கப்பூர் கலைப் பள்ளி, விநியோகிக்கப்பட்டு, உண்ணப்படாத உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவை மீட்டுக்கொண்டு வருகிறது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட முழுமைத் தற்காப்புத் திட்டம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவதாக அதிகாரிகள் கூறினர்.
தங்களது மாணவர்கள் பலர், உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவை சாப்பிட்டு நச்சுணவுப் பிரச்சினைக்கு ஆளானதை சிங்கப்பூர் கலைப் பள்ளி புதன்கிழமையன்று அறிந்தது.
அப்பள்ளியின் சுமார் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அந்த உணவை உட்கொண்ட மொத்த மாணவர்களில் கிட்டத்தட்ட ஒரு விழுக்காட்டினர் ஆவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
துடிப்பான மூப்படைதல் நிலையங்கள், பள்ளிகளில் நடவடிக்கை
குறைந்தது ஆறு துடிப்பான மூப்படைதல் நிலையங்கள், ஒரு பள்ளி ஆகியவற்றில் முழுமைத் தற்காப்புப் பயிற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படவிருந்த உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவு விநியோகம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொன்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளியிலும் ‘தை ஹுவா குவான் மோரல் சேரிட்டீஸ்’ (THKMC) அமைப்பின்கீழ் உள்ள சில துடிப்பான மூப்படைதல் நிலையங்களிலும் உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவு விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

