‘டோட்டோ’ குலுக்கலில் $12.2 மில்லியன் பரிசு: இருவர் பகிர்வு

‘டோட்டோ’ குலுக்கலில் $12.2 மில்லியன் பரிசு: இருவர் பகிர்வு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Nov 2026 - 10:41 am

2 mins read

திங்கட்கிழமை (நவம்பர் 9) நடந்த ‘டோட்டோ’ மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கலில் முதல் நிலைக்கான பரிசாக அறிவிக்கப்பட்ட $12.2 மில்லியன் தொகையை இருவர் பகிரவுள்ளனர். அவர்களுக்கு வெற்றித்தொகையாக ஆளுக்கு $6 மில்லியனுக்கு மேல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று குலுக்கல்களில் முதல் நிலை வெற்றியாளர்கள் இல்லாததைத் தொடர்ந்து, விதிகளின்படி அன்றைய தினம் நடந்த நான்காவது குலுக்கல் கூட்டுத்தொகை பகிர்வுமுறையாக நடத்தப்பட்டது.

இரண்டாம் நிலை (குரூப் 2) பரிசுகளில் 12 பங்குகள் பகிரப்பட்டன. ஒவ்வொரு பங்குக்கும் பரிசுத் தொகை $115,990 ஆகும்.

மொத்தமாக முதல்நிலை பரிசுத் தொகை $12,198,558 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதனை வென்ற ஆறு எண்கள் 5, 27, 29, 38, 40, 43 ஆகும். கூடுதல் எண் 4.

வெற்றிபெற்ற இருவரில் ஒருவரின் சீட்டு, சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணையத்தில் வழங்கப்படும் பந்தயச் சேவைகளின் வழியாக வாங்கப்பட்டது.

ஒரு வெற்றிச்சீட்டு ‘குவிக்பிக் சிஸ்டம் 7’ என்ற முறையிலும் மற்றொன்று சாதாரண குவிக்பிக் முறையிலும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாரத்தில் இருமுறை, திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்படுகிறது. அனைத்து ஆறு எண்களையும் சரியாகக் கணித்து வாங்கப்படும் குரூப் 1 முதல்நிலைப் போட்டிக்கான சீட்டு, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

அந்தப் போட்டியில் யாரும் வெற்றியடையாத நிலையில் வெற்றித்தொகை அடுத்த குலுக்கலின் வெற்றித் தொகையுடன் இணைத்து வழங்கப்படும். அதிகபட்சமாக நான்கு குலுக்கல்கள் வரையில் தொகை சேர்த்துக்கொள்ளப்படும். அவ்வாறும் வெற்றியாளர் இல்லாத நிலையில் குரூப் 2 போட்டியில் வென்றோருக்கு முதல் நிலைப்பரிசுத் தொகை பகிர்ந்து கொடுக்கப்படும்.

அக்டோபர் 29ல் நடந்த குலுக்கலில் $1.1 மில்லியன் என இருந்த முதல் நிலைக்கான பரிசுத் தொகை நவம்பர் 5ஆம் தேதி நடந்த மூன்றாம் குலுக்கலுக்குள்ளாக $5.5 மில்லியன் என ஆனது. பிறகு நவம்பர் 9 நடந்த குலுக்கலுக்குள்ளாக அது $12 மில்லியனைக் கடந்தது.

கடைசியாக இதே போன்று ஜூலை மாதமும் பரிசுத் தொகை பன்மடங்கு உயர்ந்து $10 மில்லியனையும் கடந்தது. அதிலும் இரு பரிசுச் சீட்டுகளுக்கு ஜூலை 12ஆம் தேதி ஒவ்வொன்றுக்கும் $6.4 மில்லியனுக்கு மேல் பகிர்ந்து வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்