அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 9) நடைபெறவுள்ள ‘டோட்டோ’ குலுக்கலில், முதல் நிலைக்கான பரிசுத் தொகை தோராயமாக $10 மில்லியனாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்று குலுக்கல்களில் முதல் நிலை வெற்றியாளர்கள் எவரும் இல்லாததைத் தொடர்ந்து, விதிகளின்படி இந்த நான்காவது குலுக்கல் கூட்டுத்தொகை பகிர்வுமுறைக்கு மாறுகிறது.
கடந்த மூன்று குலுக்கல்களிலும் முதல் நிலை வெற்றியாளர் எவரும் தேர்வாகாத காரணத்தால் பரிசுத் தொகை தொடர்ந்து திரண்டு அதிகரித்தது. அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் கிட்டத்தட்ட $1.2 மில்லியனாக இருந்த பரிசுத் தொகை, நவம்பர் 2ஆம் தேதி $2.9 மில்லியனாகவும் நவம்பர் 5ஆம் தேதி $5.5 மில்லியனுக்கும் மேலாகவும் படிப்படியாக உயர்ந்தது.
இந்த ஆண்டில் டோட்டோ முதல் பரிசுத் தொகை $10 மில்லியனை எட்டுவது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன்னர் ஜனவரி 29, மே 4, ஜூலை 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குலுக்கல்களிலும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ ஹாங்பாவ் குலுக்கலிலும் பரிசுத் தொகை $10 மில்லியனை எட்டியிருந்தது. ஜூலை மாதம் நடைபெற்ற முந்தைய பகிர்வுமுறைக் குலுக்கலில், $12.8 மில்லியன் பெரும் பரிசுத் தொகையை இருவர் பகிர்ந்துகொண்டனர்.
திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள இக்குலுக்கல் இரவு 9:30 மணிக்கு நடைபெறும். திங்கட்கிழமை முடிவடையும் இந்த நான்காவது குலுக்கலிலும் முதல் நிலை வெற்றியாளர் எவரும் இல்லாதபட்சத்தில், மொத்தப் பரிசுத் தொகை அடுத்த நிலைப் பிரிவில் (இரண்டாம் நிலை) வெற்றி பெற்றவர்களுக்கு முழுமையாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
