வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதிக்கு முன்னர், தாங்கள் ஓட்டும் லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத ஓட்டுநர்கள் பிடிபட்டால், அந்த லாரி உரிமையாளர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் காவல்துறை திங்கட்கிழமை (நவம்பர் 24) அறிக்கையில் தெரிவித்தது.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், கடிதங்கள் ஆகியவற்றின்வழி பலமுறை நினைவூட்டிய பிறகும் இம்மாதம் 14ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 30 விழுக்காட்டு லாரி ஓட்டுநர்கள் தங்கள் லாரிகளில் இன்னும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
ஏற்றி வரும் சரக்குககளின் சுமையையும் கருத்தில்கொள்ளும்போது 3,501லிருந்து 12,000 கிலோகிராமுக்கு இடைப்பட்ட எடையைக் கொண்டுள்ள லாரிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள், சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் அவற்றில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தியிருக்கவேண்டும். அவற்றைப் பொருத்த, அத்தகைய லாரிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு இரண்டிலிருந்து மூவாண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் மொத்தமாக சுமார் 17,000 லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், வேக விதிமீறல்களைத் தடுத்து விபத்துகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. அதோடு, சம்பந்தப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் எரிசக்தியின் அளவைக் குறைப்பது போன்ற நன்மைகளையும் அவை வழங்குகின்றன.
சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் மாண்ட அல்லது காயமுற்றோரின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவில் அதிகமாகப் பதிவானது. உயிரிழப்பை ஏற்படுத்திய மூன்றில் ஒரு விபத்துக்கு வேக விதிமீறல் காரணமாக இருந்தது.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தாத லாரிகளை ஓட்ட அவற்றின் உரிமையாளர் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அவற்றுக்கான சாலை வரியை மீண்டும் செயல்படுத்த முடியாது என்றும் சிங்கப்பூர் காவல்துறை குறிப்பிட்டது.
முன்னதாகவே வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துவதை ஊக்குவிக்க அதன் தொடர்பிலான குற்றங்களுக்கு 1,000லிருந்து 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கலாம் என்ற பரிந்துரை இப்போது சட்டபூர்வமாக முன்வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சும் போக்குவரத்துக் காவல்துறையும் அறிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படாத லாரிகளை ஓட்டுபவர்கள் பிடிபட்டால், வேலையின்போது அபாயகரமான செயலில் ஈடுபட்ட காரணத்தினால் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் அந்த லாரிகளின் உரிமையாளர் நிறுவனங்களுக்குத் திருத்த உத்தரவு வழங்கப்படும். அதனையடுத்து, கொடுக்கப்பட்ட கெடுவுக்குள் அந்நிறுவனம் தங்களின் எல்லா லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தவேண்டும்.
அவ்வாறு செய்யாதோருக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பிஸ்சேஃப் (bizSAFE) சான்றிதழைப் பெறமுடியாமல் போகலாம்.

