இந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அணிக்கு செங்காங் குழுத்தொகுதியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கடும் போட்டி இருக்கும் என்று மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் தெரிவித்து உள்ளார்.
தற்போது செங்காங் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சிக்கு இருக்கும் சாதக நிலையைக் கவனத்தில் கொண்டுள்ள மசெக அங்கு கடுமையான போட்டியைத் தரும் என்ற நம்பிக்கைத் தமக்கு இருப்பதாக அவர் கூறினார்.
செங்காங் குழுத் தொகுதிகக்கான மசெக அணியினருடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) தொகுதி உலா மேற்கொண்ட டாக்டர் லாம், காம்பஸ்வேல் வட்டார கோப்பித்தியாம் சதுக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“செங்காங்கில் மட்டுமல்ல, ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையான போட்டி இருக்கும் என்பதை எங்கள் கட்சி புரிந்து வைத்துள்ளது.
“குழுத் தொகுதிகளில் மட்டுமல்ல ஒவ்வொரு தனித் தொகுதியிலும்கூட போட்டி கடுமையாக இருக்கும்.
“ஆனால், நாங்கள் எதையும் அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட மாட்டோம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு நாங்களும் கடுமையாகப் பாடுபடுவோம்.
“செங்காங் குழுத் தொகுதி எங்கள் வசம் இல்லை. இங்குள்ள நகர மன்றத்தின் வசதிகள் எங்களுக்கு இல்லை.
“இருப்பினும், அவற்றையே நாங்கள் சவாலாக எடுத்துக்கொள்வோம். குழுத் தொகுதியில் பொறுப்பில் இருப்போரைக் காட்டிலும் நாங்கள் எப்போதுமே அதிக சவால்களைச் சந்திக்கக்கூடியவர்கள்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
செங்காங்கில் மிகவும் கடுமையான போட்டியை எதிர்த்தரப்பு எதிர்பார்ப்பதாக பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக டாக்டர் லாம் அந்தக் கருத்துகளைக் கூறினார்.
செங்காங் குழுத் தொகுதியில் 2020 பொதுத் தேர்தலில் மசெக அணி வெற்றிபெறவில்லை. அந்த அணியில் இருந்த டாக்டர் லாம் மட்டுமே மீண்டும் இந்தத் தேர்தலில் களமிறங்குகிறார்.
டாக்டர் லாம், அப்போது அமைச்சராக இருந்த இங் சீ மெங், உள்துறை, சுகாதார அமைச்சுகளின் அப்போதைய மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் மின், வழக்கறிஞர் ரேமண்ட் லாய் ஆகியோரைக் கொண்ட மசெக அணி 2020 பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.
பாட்டாளிக் கட்சி அந்தத் தேர்தலில் 52.12 விழுக்காட்டு வாக்குகளுடன் செங்காங் குழுத் தொகுதியைக் கைப்பற்றியது.

