விமர்சகர்கள் குறைகூறலாம்; ஆனால் சிங்கப்பூர் மக்களிடையே வலுவான ஆதரவு உள்ளது

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான நிலைப்பாடு

விமர்சகர்கள் குறைகூறலாம்; ஆனால் சிங்கப்பூர் மக்களிடையே வலுவான ஆதரவு உள்ளது

3 mins read
4f79022f-b4d0-4850-9937-7798835e811f
உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா சண்முகம். - படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 2

போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரின் கடுமையான நிலைப்பாடு தொடரும் என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியிருக்கிறார்.

Watch on YouTube

உலக அளவில் போதைப்பொருள்களுக்கு எதிரான மனப்பான்மை தணிந்துவரும் நிலையிலும் நாம் மற்றவர்களால் விமர்சிக்கப்படும் சூழலிலும் சிங்கப்பூரின் போராட்டம் தொடரும் என்றார் அவர். மக்களுக்குச் சரியானதைச் செய்வதே அரசாங்கத்தின் கடமை என்றும் அமைச்சர் கூறினார்.

வியாழக்கிழமை (மார்ச் 12) காலை நடைபெற்ற போதைப் புழக்கத்திற்கு எதிரான சமூக மீள்திறன் குறித்த கருத்தரங்கில் திரு சண்முகம் பேசினார்.  

போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான சிங்கப்பூரின் அணுகுமுறை ஆயிரக்கணக்கான உயிர்களைக் காத்துள்ளது என்றும் மக்கள் வலுவான ஆதரவை நல்கிவருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

‘‘உலகளவில் போதைப்பொருள்களுக்கு எதிரான மனப்பான்மை தளர்வடைந்துவரும் நிலையிலும் நாம் மற்றவர்களால் விமர்சிக்கப்படும் சூழலிலும் சிங்கப்பூர் மக்களுக்குச் சரியானதைச் செய்வதே நமது கடமையாகும்,’’ என்றார் திரு சண்முகம். 

அரசு அதிகாரிகள், சமூகப் பங்காளிகள், கல்வியாளர்கள் என ஏறத்தாழ 250க்கும் மேற்பட்டோர் அமர்வில் பங்கேற்றனர். போதைப்பொருள் புழக்கம் சார்ந்த உலகளாவிய சூழல், போதைப் பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றின் தொடர்பிலான சிங்கப்பூரின் உத்திகள் உரையில் முக்கிய இடம்பிடித்தன.

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் உறுதியான நிலைப்பாட்டை மக்கள் தொடர்ந்து ஆதரிப்பது மனத்திற்கு நிறைவளிப்பதாகச் சுட்டிய தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம், அதன் தொடர்பில் கருத்தாய்வு முடிவுகளையும் பகிர்ந்தார்.

கடந்த ஆண்டு மரண தண்டனை குறித்துப் பொதுமக்களிடையே நடத்தப்பட்ட கருத்தாய்வில் 87 விழுக்காட்டினர், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டனர்.

ஃபுராமா ரிவர்ஃபிரண்ட் (Furama Riverfront) ஹோட்டலில் நடைபெற்ற ‘போதைப் புழக்கத்திற்கு எதிரான சமூக மீள்திறன்’ (CRADA) கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஆராய்ச்சித் தொகுப்பைத் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் பார்வையிடுிகிறார். உள்துறை அமைப்புக் குழுவின் உளவியல் பிரிவின் மூத்த முதன்மை உளவியலாளர் டாக்டர் ஜாஸ்மின் கோர் (இடது) அவருடன் இருக்கிறார்.
ஃபுராமா ரிவர்ஃபிரண்ட் (Furama Riverfront) ஹோட்டலில் நடைபெற்ற ‘போதைப் புழக்கத்திற்கு எதிரான சமூக மீள்திறன்’ (CRADA) கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஆராய்ச்சித் தொகுப்பைத் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் பார்வையிடுிகிறார். உள்துறை அமைப்புக் குழுவின் உளவியல் பிரிவின் மூத்த முதன்மை உளவியலாளர் டாக்டர் ஜாஸ்மின் கோர் (இடது) அவருடன் இருக்கிறார். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒப்புநோக்க 2023ஆம் ஆண்டில் அந்த விகிதம் 77 விழுக்காடாக இருந்தது.

அதேபோன்று போதைப்பொருளைப் பற்றி மக்கள் எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர் என்பதன் தொடர்பில் சென்ற ஆண்டு (2025) தேசிய அளவில் கருத்தாய்வு நடத்தப்பட்டது. அதன்படி, சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் வராமல் தடுப்பதற்கான கடுஞ்சட்டங்கள் தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று இளையர்களில் கிட்டத்தட்ட 93 விழுக்காட்டினரும் பெரியவர்களில் 95 விழுக்காட்டுக்கும் அதிகமானோரும் கருத்துரைத்துள்ளதைத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

‘‘2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வுடன் ஒப்பிடுகையில், கடுமையான சட்டங்கள் நடப்பில் இருப்பதற்கு இளையர்களிடையே ஆதரவு பெருகியுள்ளது. அதே போன்று பெரியவர்களிடையே அந்த ஆதரவு பெரும்பாலும் நிலையானதாகவும் உள்ளது,’’ என்றும் திரு சண்முகம் விவரித்தார்.

போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் அணுகுமுறை (i) அமலாக்கம், (ii) கல்வி, (iii) மறுவாழ்வு எனும் மூன்று முக்கிய அம்சங்களில் நிலைகொண்டுள்ளதாக குறிப்பிட்டார் திரு சண்முகம்.

தனித்து நின்றாலும் தளராமல் போராடும் சிங்கப்பூர் 

‘‘உலகின் பல பகுதிகள் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில், நாம் அதற்கு எதிராகத் தனித்து நின்று தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறோம்,’’ என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூரின் கொள்கை என்பது போதைப்பொருள் புழக்கத்தைக் குறைப்பதன்று என்றும் மாறாக அதைத் தடுப்பதைச் சார்ந்தது என்றும் அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 84 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், மரண தண்டனை நடப்பில் இருப்பதால் சிங்கப்பூருக்குள் அதிக அளவில் போதைப்பொருள்களைக் கடத்திக் கொண்டுவருவது தடுக்கப்படுகிறது என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தனர். 

மேலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனையே அதிகச் செயல்திறன்மிக்கதாய்த் திகழ்வதாக 82 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் நம்புவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

போதைப்பொருளுக்கு எதிரான நிலைப்பாடு தொடரும்

1990களில், ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 6,000 போதைப்பொருள் புழங்கிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்து, ஆண்டுக்கு ஏறக்குறைய 3,000 பேர் என்ற நிலையில் இருப்பதையும் திரு சண்முகம் சுட்டினார்.

பொருளியல், வட்டாரக் கட்டமைப்பு என்று பற்பல சூழல்களைக் கவனத்தில் கொண்டால் போதைப்பொருள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகள் இங்கே பெருமளவில் அதிகரித்திருக்கக்கூடும். ஆனால் சிங்கப்பூரின் அணுகுமுறை ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் சண்முகம் சொன்னார்.

போதைப் புழக்கத்திற்கு எதிரான சமூக மீள்திறன் குறித்த கருத்தரங்கில் ‘ஐலண்ட் ஆஃப் ஹோப்’ (Island of Hope) என்ற புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (நடுவில்).
போதைப் புழக்கத்திற்கு எதிரான சமூக மீள்திறன் குறித்த கருத்தரங்கில் ‘ஐலண்ட் ஆஃப் ஹோப்’ (Island of Hope) என்ற புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (நடுவில்). - படம்: செய்யது இப்ராகிம்
குறிப்புச் சொற்கள்