மின்சிகரெட் குற்றங்களை ஒடுக்க மே 1 முதல் கடுமையான தண்டனை

மின்சிகரெட் குற்றங்களை ஒடுக்க மே 1 முதல் கடுமையான தண்டனை

2 mins read
4eaa5e48-653f-4c84-b4c3-ed9521528421
மேலும் கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘கேபோட்’ எனும் மின்சிகரெட்டுகளைக் கடத்துவதிலோ விநியோகிப்பதிலோ இளையர்கள் அல்லது பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் உள்ளோரையோ ஈடுபடுத்தும் பெரியவர்களுக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

தங்களிடம் கேபோடை வைத்துக்கொண்டு இளையர் ஒருவர் அதைப் பயன்படுத்துவதைத் தடுக்காமல் இருக்கும் பெரியவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இவை, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய மின்சிகரெட் தடுப்புச் சட்டங்களில் அடங்கும். புதிய சட்டங்கள் வரும் மே மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வரும்.

புதிய புகையிலை, மின்சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டத்தில், புகையிலை (விளம்பர, விற்பனை கட்டுப்பாடு) (திருத்தம்) மற்றும் இதர விவகார மசோதாவின் மூலம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன்பு புகையிலை (விளம்பர, விற்பனைக் கட்டுப்பாடு) சட்டம் என்றழைக்கப்பட்ட இது, மின்சிகரெட் புகைப்பது, கேபோட்கள் ஆகியவற்றுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைக் கடுமையாக்குகின்றன.

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட், கேபோட் என்றழைக்கப்படுகிறது.

புதிய சட்டங்களின்கீழ், இரவு கேளிக்கை கூடங்கள் போன்றவை தங்களது வாடிக்கையாளர்கள் மின்சிகரெட்டுகளைப் புகைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மின்சிகரெட்டுகளை வாடிக்கையாளர்கள் வீசியெறிவதையும் அத்தகைய வர்த்தகங்கள் கட்டாயமாக்கவேண்டும். அவ்வாறு செய்யாதோரை அத்தகைய இடங்களிலிருந்து வெளியேற்றவும் அவற்றுக்கு உரிமை உண்டு.

வாகனம் ஓட்டிக்கொண்டு சிங்கப்பூர் வரும்போது அந்த வாகனத்தில் மின்சிகரெட்டுகள் இருந்தால் சட்டரீதியான நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, அவை எப்படி வாகனத்துக்குள் வந்தன என்று தங்களுக்குத் தெரியாது என ஓட்டுநர் இனி கூற முடியாது. மாறாக, அந்த மின்சிகரெட்டுகளைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்பதை நிரூபிப்பது சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் பொறுப்பாகிறது.

புதிய சட்டத்தின்கீழ் மின்சிகரெட் குற்றங்களுக்கான தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்துவோருக்கு தண்டனை ஐந்து மடங்காகவும் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு 20 மடங்காகவும் ஆகின்றன.

அவ்வகையில் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோருக்கு 10,000 வெள்ளி அபராதமும் அவற்றை விற்போருக்கு 200,000 வெள்ளி வரையிலாள அபராதம் மற்றும் ஆறாண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

மின்சிகரெட் கடத்தல்காரர்களுக்கு 300,000 வெள்ளி வரையிலான அபராதமும் ஒன்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்