வேக வரம்பை மீறுவோருக்கு மேலும் கடுமையான தண்டனை

2 mins read
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படாத லாரி உரிமையாளர்களுக்கும் பொருந்தும்
f5faf56a-66dc-4fac-841a-da7620e33fce
சிலேத்தாரில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவல்துறை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து வேக வரம்பை மீறும் ஓட்டுநர்கள், லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தாத உரிமையாளர்கள் ஆகியோருக்குக் கூடுதலான தண்டனைப் புள்ளிகளும் (demerit points) கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

கனமற்ற வாகனங்களை ஓட்டுபவர்கள் மணிக்கு 20 கிலோமீட்டருக்கும் அதிக அளவு வேக வரம்பை மீறினால் அவர்களுக்கு இனி ஆறு தண்டனைப் புள்ளிகளும் 200 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும். தற்போது இவர்களுக்கு நான்கு தண்டனைப் புள்ளிகளும் 150 வெள்ளி அபராதமும் விதிக்கப்படுகின்றன.

மணிக்கு 40லிருந்து 50 கிலோமீட்டர் அளவு வேக வரம்பை மீறுவோருக்கு 18 தண்டனைப் புள்ளிகள் வழங்கப்படும், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும். தற்போதைய விதிமுறைகளின்படி இவர்களுக்கு 12 தண்டனைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன, நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியுள்ளது.

தண்டனை மேலும் கடுமையாக்கப்படுவது குறித்து முதலில் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. வேக வரம்பை மீறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாண்டு முற்பாதியில் கிட்டத்தட்ட 125,000 வேக வரம்பு மீறல் சம்பவங்கள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவானதைவிட 45 விழுக்காடு அதிகமாகும்.

இவற்றோடு, பள்ளிப் பகுதிகள், வெள்ளி வட்டாரங்கள் (Silver zones) போன்ற பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் வேக வரம்பு மீறலுக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம்.

லாரிகளில் உடனடியாக வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துமாறு போக்குவரத்துக் காவல்துறை, லாரி உரிமையாளர்களை வேண்டுகிறது. லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவதற்கான கெடு வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நிறைவடைகிறது.

டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நிலவரப்படி 20 விழுக்காட்டு லாரிகளில் இன்னும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படவில்லை. கெடு முடிந்தவுடன் இந்த விதிமுறைக்கு இணங்காத லாரிகளுக்களுக்கான சாலை வரி புதுப்பிக்கப்படாது; அந்த லாரிகளைப் பயன்படுத்த முடியாமல் போகும்.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி விதிமுறையைப் பின்பற்றாத லாரிகளுக்கான தண்டனை கடுமையாக்கப்படவுள்ளது. வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தாதது, வேகக் கட்டுப்பாட்டுக் கருவியின் செயல்பாட்டை மாற்றுவது ஆகியவற்றுக்கான அதிகபட்ச அபராதத்தை 1,000லிருந்து 10,000 வெள்ளிக்கு உயர்த்த உள்துறை அமைச்சு 2026ல் சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைக்கும்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படாத லாரிகளின் உரிமையாளர்களுக்கு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் வேலையின்போது அபாயகரமான செயலில் ஈடுபட்டதற்காகத் திருத்த உத்தரவு வழங்கப்படும். அதன்படி கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தங்களின் எல்லா லாரிகளிலும் கருவியைப் பொருத்தத் தவறினால் அவர்களுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்