தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுப்பயணத் துறை வளர்ச்சியை அதிகரிக்க முயற்சி

2 mins read
7def6a3b-f8c8-49a0-b6c0-8c70d773dd08
மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: சாவ் பாவ்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் சிங்கப்பூர் சவால்மிக்க சூழலை எதிர்நோக்கக்கூடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

நாடுகளும் வளர்ச்சி விகித முன்னுரைப்புகளைக் குறைப்பதால் பயனீட்டாளர் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றார் அவர்.

சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற சுற்றுப்பயணத்துறை மாநாட்டில் பேசிய அமைச்சர் ஃபூ, உலகளாவிய மாற்றங்களால் சிங்கப்பூர் சுற்றுப்பயணத் துறைக்கு ஏற்படும் தாக்கம் கண்காணிக்கப்படும் என்றார்.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 21 விழுக்காடு அதிகரித்துள்ளதைச் சுட்டிய அமைச்சர் ஃபூ, அதை மேலும் அதிகரிக்க சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் பல முயற்சிகளை எடுத்துவருவதாகச் சொன்னார்.

அதை முன்னிட்டு 2040ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் $47 பில்லியன் முதல் $50 பில்லியன் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கழகம் அறிவித்த 2040ஆம் ஆண்டுக்கான பெருந்திட்டத்தில் அதுவும் அடங்கும்.

சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அவர்கள் செய்யும் செலவில் சிங்கப்பூர் கவனம் செலுத்தவிருக்கிறது. எனவே இங்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்கள் இங்குச் செலவு செய்யும் விகிதம் அதைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

சுற்றுப்பயணத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு கூடுதலான சுற்றுப்பயணிகளை ஈர்த்து எதிர்காலத்திற்குத் தயாராகும் சுற்றுப்பயணத் துறையை உருவாக்குவதில் அது உதவும்.

அதற்குச் சந்திப்புகள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் (மைஸ்) ஆகியவை மிக முக்கிய அடித்தளங்களாக அமையும் என்று அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.

சந்திப்புகள், மாநாடுகள், கண்காட்சிகளுக்காகச் சிங்கப்பூர் வருவோர் இங்கு வரும் சுற்றுப்பயணிகளைவிட இரண்டு மடங்கு அதிகம் செலவு செய்ய முனைவதாக அவர் விளக்கிக் கூறினார்.

அதை முன்னிட்டு டௌன்டவுன் பகுதியில் புதிய ‘மைஸ்’ நிலையத்தைக் கட்டுவது குறித்துச் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் பரிசீலித்து வருகிறது.

அந்தப் புதிய வசதி தென்கிழக்காசிய வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ச்சர்ட் சாலை, செந்தோசா போன்ற முக்கியச் சுற்றுலாப் பகுதிகளுக்கும் புத்துணர்ச்சியூட்டும் முயற்சி மேற்கொள்வது குறித்து மாநாட்டில் பகிரப்பட்டது.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், அனைத்துலக அளவிலிருந்து கூடுதலானோரை ஈர்க்க தென்கொரியாவின் ‘விகல் விகல்’ என்ற நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

தற்போது நிலவிவரும் வர்த்தகப் பதற்றத்தைப் பற்றிப் பேசிய கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெலிசா ஆவ், “உலகின் நிச்சயமற்ற சூழல் சுற்றுப்பயணத் துறையை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கணிக்க முடியாது,” என்றார்.

சுற்றுலாத் துறை மூலம் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு கிடைக்கும் வருவாய் $29 பில்லியனுக்கும் $30.5 பில்லியனுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் சொன்னது. அனைத்துலக அளவில் 17 மில்லியனுக்கும் 18.5 மில்லியனுக்கும் இடையிலான பயணிகளை ஈர்க்கக் கழகம் இலக்கு கொண்டுள்ளது.

அதை முன்னிட்டுக் கழகம் ஏழு புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்