சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்துறையின் வருமானம் முன் இல்லாத அளவில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு சுற்றுப்பயணத்துறையின் வருமானம் உச்சத்தில் இருந்தது.
அந்த ஆண்டில் சுற்றுப்பயணத்துறையின் வருமானம் $27.7 பில்லியனாக இருந்தது.
இந்தத் தகவலை சிங்கப்பூர் சுற்றுப்பயணத்துறை கழகம் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) வெளியிட்டது.
கடந்த ஆண்டுக்கான சுற்றுப்பயணத்துறை வருமானம் $27.5 பில்லியனிலிருந்து $29 பில்லியன் வரை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டது.
சுற்றுப்பயணத்துறையின் வருமானம் $29 பில்லியனை நெருங்கும் என்று நம்பப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுற்றுப்பயணத்துறையின் வருமானம் $22.4 பில்லியனை எட்டியது.
2023ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் பதிவான தொகையைவிட இது 10 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டின் முழு ஆண்டு வருமான விவரங்கள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும்.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிலிருந்து சீரான அளவில் அதிகரித்து வருகிறது.
2024ஆம் ஆண்டில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் வருகை 21 விழுக்காடு அதிகரித்து 16.5 மில்லியனாகப் பதிவானது.
2019ஆம் ஆண்டில் 19.1 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.
ஆக அதிகமாக சீனாவிலிருந்து 3.08 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டனர்.
இந்தோனீசியாவிலிருந்து 2.49 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் இந்தியாவிலிருந்து 1.2 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கும் விசா இல்லாமல் 30 நாள்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்று 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பல நகரங்களிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூரை அடையலாம்.
எனவே, சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டுள்ளது.

