சியாங் மாய்: தாய்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 12 வெளிநாட்டவர்கள் காயம் அடைந்தனர்.
ஞாயிற்றுக் கிழமை (நவம்பர் 9) லம்புன் மாநிலத்தின் மே தா எல்லையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லம்பாங்-சியாங் மாய் நெடுஞ்சாலையில் சரிவான பகுதியில் பேருந்து கவிழ்ந்தது.
லம்பாங்-சியாங் மாய் நெடுஞ்சாலை, தெற்கு தாய்லாந்தின் லம்பாங், சியாங் மாய் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாகும்.
பேருந்தில் 38 வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பயணம் செய்தனர். சாலையில் வேகமாகத் திரும்பியபோது பக்கவாட்டில் பேருந்து சாய்ந்தது. இரு பயணிகள் கடுமையாகக் காயமுற்றனர். பத்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மீட்புப் படையினர் அவர்களை மீட்டு லம்பாங்கில் உள்ள ஹாங் சாட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதி நெடுஞ்சாலையை அதிகாரிகள் தற்காலிகமாக மூடினர். ஹாங் சாட் நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவினர் சாலைகளில் தடுப்புகளைப் போட்டு பேருந்தையும் உடைந்த கண்ணாடிகளையும் அப்புறப்படுத்தினர்.
பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

