அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சுற்றுப்பயணி மீது குற்றச்சாட்டு

1 mins read
88d26e6d-1c49-4952-b7ce-5d8299ac487b
ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிக்க தடை செய்யப்பட்ட இடத்தில் சீனாவைச் சேர்ந்த 41 வயது ஹுவாங் கியூலின் புகைபிடித்ததாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் உள்ள பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வட்டாரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே புகைபிடிக்க அனுமதிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்ட இடத்தில் புகைபிடித்ததற்காக அபராதம் விதிக்கப்படாமல் இருக்க தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சுற்றுப்பயணி ஒருவர் மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 17) குற்றம் சுமத்தப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், சீனாவைச் சேர்ந்த 41 வயது ஹுவாங் கியூலின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைத்தொகுதிக்கு வெளியே மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று அவர் புகைபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் உள்ள பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வட்டாரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே புகைபிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரியான டான் டார் சுவாக்கிடம் ஹுவாங் $50 லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த அமலாக்க அதிகாரி லஞ்சம் வாங்க மறுத்துவிட்டதாக லஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

குற்றத்தை ஒப்புக்கொள்ள இருப்பதாக ஹுவாங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மே 15ல் அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.

ஊழல் குற்றம் புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்