பொங்கோலில் மே 12ஆம் தேதி, துன்புறுத்தப்பட்ட பூனை ஒன்று உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையில் நகர மன்றம் ஈடுபடும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
தேசியப் பூங்காக் கழகத்துடனும் விலங்குநல ஆர்வலர் குழுக்களுடனும் இணைந்து நகர மன்றம் இந்நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார் அவர்.
வியாழக்கிழமை (மே 15), திரு கான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
‘ஷேர் கான்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பூனை பலத்த காயங்களுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் பலரும் விலங்குநலம் குறித்து எழுத்துபூர்வமாகக் கருத்துரைத்ததாக அவர் கூறினார்.
“இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாக தேசியப் பூங்காக் கழகம் உறுதியளித்துள்ளது,” என்று கூறிய திரு கான், விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் விலங்குகளை அக்கறையுடன் நடத்த வேண்டும் என்று தமது பதிவில் வலியுறுத்திய அவர், “கனிவுமிக்க சமுதாயமாக விளங்குவோமாக. விலங்குகள் மீது அன்பும் கருணையும் செலுத்துவோமாக,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு கான் தலைமையிலான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணி பொங்கோல் குழுத்தொகுதியில் வெற்றிபெற்றது.
முன்னதாக, பொங்கோலில் புதிய நகர மன்றம் அமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் கான் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பூனை துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து விலங்குநல ஆர்வலர் குழுவான ‘லுனி சிங்கப்பூர்’, மே 13ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பதிவிட்டதை அடுத்து பலரின் கவனத்தை ஈர்த்தது. தான் சந்தித்த ஆகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக இதை அக்குழு குறிப்பிட்டிருந்தது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அந்தப் பூனை மாண்டுவிட்டதாக அது தெரிவித்தது.
முன்னதாக, மே 9ஆம் தேதி ஈசூனில் ‘கிங் காங்’ என்றழைக்கப்பட்ட பூனை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது.
உள்துறை, சட்ட அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கா. சண்முகம் அச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அதே நாளில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இரு சம்பவங்களும் விலங்குகளுக்குத் தீங்கிழைப்போருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதையும் சமூக விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதையும் காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.