அமெரிக்காவுடன் வர்த்தகப் பற்றாக்குறை: சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு விளக்கம்

அமெரிக்காவுடன் வர்த்தகப் பற்றாக்குறை: சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு விளக்கம்

2 mins read
6d6f414b-db37-4320-8eb0-f31e2539c6a3
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், சிங்கப்பூர் உட்பட 16க்கும் மேற்பட்ட முக்கியப் பொருளியல்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சிங்கப்பூருக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும் அதன் தொழில்துறை இடவசதிப் பயன்பாட்டு விதிகம் ‘மிக ஆரோக்கியமான’ நிலையில் உள்ளதாகவும் வர்த்தக, தொழில் அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 12) கூறியுள்ளது.

அது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் உள்ள தகவலுக்கு முரணாக உள்ளது. மிகையான உற்பத்தி ஆற்றல்கள் உள்ளதாகக் கூறி, அந்த அலுவலகம் சிங்கப்பூர் உட்பட 16க்கும் மேற்பட்ட முக்கியப் பொருளியல்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

2024ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் பொருள்களிலும் சேவைகளிலும் மொத்தம் 27 பில்லியன் அமெரிக்க டாலர் (S$34.5 பில்லியன்) வர்த்தக உபரியைச் சிங்கப்பூர் கொண்டுள்ளதாக அந்த அலுவலகத்தின் மத்திய பதிவு அறிவிப்பில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளதாக அமைச்சு, அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

“ஒப்புநோக்க, அமெரிக்கப் பொருளியல் பகுப்பாய்வுப் பிரிவின் புள்ளிவிவரங்கள்படி, 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான பொருள்கள் வர்த்தகத்தில் சிங்கப்பூருக்கு 1.7 பில்லியன் டாலர் பற்றாக்குறையும் சேவைகள் வர்த்தகத்தில் 25.1 பில்லியன் டாலர் பற்றாக்குறையும் இருந்தன.

“இரண்டையும் சேர்த்து அமெரிக்காவுடனான மொத்த வர்த்தகப் பற்றாக்குறை கிட்டத்தட்ட 27 பில்லியன் டாலர்,” என்று அமைச்சு கூறியது.

தொழில்துறை இடவசதிப் பயன்பாட்டு விகிதம் குறைந்தபோதிலும் சிங்கப்பூர் அதன் உற்பத்தி ஆற்றல்களைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்ததாக அறிவிப்பு சுட்டிக்காட்டியதையும் அமைச்சு குறிப்பிட்டது.

“உண்மையிலேயே, சிங்கப்பூரின் தொழில்துறை இடவசதிப் பயன்பாட்டு விகிதம் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டில் மிக ஆரோக்கியமான நிலையில் உள்ளது. அது, தொடர்ந்து இதே நிலையிலேயே இருந்து வருகிறது.

“சிங்கப்பூரில் நிலத்திற்குப் பற்றாக்குறை உள்ளது. மற்ற நிலப் பயன்பாட்டுத் தேவைகள் காரணமாக, தொழில்துறைப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலத்தின் அளவு காலப்போக்கில் குறைந்துவிட்டது,” என்று அமைச்சு சொன்னது.

இந்தத் தகவல்களை அமெரிக்க அலுவலகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் வர்த்தகப் புள்ளிவிவரங்கள், விசாரணைகள் ஆகியவற்றின் தொடர்பில் மேலும் விளக்கங்களைப் பெற அதனைத் தொடர்புகொள்ளப்போவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

வர்த்தகங்களும் சம்பந்தப்பட்ட மற்றத் தரப்புகளும் தங்களது கருத்துகளை go.gov.sg/contactmti என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்அமெரிக்காவர்த்தகம்பற்றாக்குறை