நிலையில்லா அரசியல், பொருளியல் சூழலால் ஏற்பட்டுள்ள வணிகப் பதற்றங்களும் பயனீட்டாளர் நம்பிக்கைக் குறைவும் பயணிகள் விமானப் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டில் 5.22 பில்லியன் பயணிகளை விமானங்கள் சுமந்து செல்லும் என்று கடந்த 2024 டிசம்பரில் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (அயட்டா) கணித்திருந்தது.
ஆனால், அது இப்போது 4.99 பில்லியனாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டைவிட நான்கு விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வருமானம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏறக்குறைய 350 விமானப் போக்குவரத்து நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அயட்டா, அந்நிறுவனங்கள் இவ்வாண்டில் US$36 பில்லியன் (S$46.4 பில்லியன்) லாபம் ஈட்டும் என மதிப்பிட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் அவை US$32.4 பில்லியன் லாபம் ஈட்டியிருந்தன.
அத்துடன், 2024ஆம் ஆண்டில் 3.4 விழுக்காடாகப் பதிவான நிகர லாபமும் இவ்வாண்டில் 3.7 விழுக்காடாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் முற்பாதியில் அனைத்துலகச் சந்தையில் உறுதியற்ற நிலை நிலவியபோதும், ஒட்டுமொத்தத்தில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்குச் சிறந்த ஆண்டாகவே அமையும் என்று அயட்டா தலைமை இயக்குநர் வில்லீ வால்ஷ் திங்கட்கிழமை (ஜூன் 2) புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
மேலும், விமான எரிபொருள் விலை 13 விழுக்காடு குறைந்திருப்பதும் நிறுவனங்களின் லாபமுடைமைக்கு ஊக்குவிப்பாக அமையும் என்றும் திரு வால்ஷ் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
விமானப் போக்குவரத்துச் சந்தையைப் பொறுத்தமட்டில், ஆசிய பசிபிக் வட்டாரம் ஆகப் பெரியதாகத் திகழும் என்றும் சீனா, வியட்னாம், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதால் பயணிகள் போக்குவரத்திற்கான தேவை வலுவாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அயட்டா கூறியிருக்கிறது.
முன்னர் எதிர்பார்த்த அளவில் இல்லாவிடினும், வலுவான வேலைவாய்ப்பு, மிதமான பணவீக்கம் குறித்த கணிப்புகளால் விமானப் போக்குவரத்திற்கான தேவை ஏறுமுகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான பயணிகள் அடுத்த 12 மாதங்களில் அதிகமாகப் பயணம் செய்வர் என எதிர்பார்ப்பதாகக் கடந்த ஏப்ரலில் அயட்டா நடத்திய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது. வணிகப் பதற்றங்களால் தனிப்பட்ட அளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக 73 விழுக்காட்டினர் கூறினர். அதே வேளையில், தங்கள் பயணப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று 65 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இவ்வாண்டில் இருவழி விமானப் பயணத்திற்கான சராசரிக் கட்டணம் US$374ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் அக்கட்டணம் US$380ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. சென்ற ஆண்டில் அக்கட்டணம் $387ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்திலிருந்தே விமானப் போக்குவரத்துத் துறை எதிர்கொண்ட விநியோகத் தொடர் சிக்கல் இவ்வாண்டிலும் நீடிக்கும் என்று அயட்டா தெரிவித்துள்ளது.