சிங்கப்பூரில் விற்கப்படும் வர்த்தக அட்டைப் பொட்டலங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.
புதிர்ப் பெட்டிகள் (blind boxes) சம்பந்தப்பட்ட சூதாட்ட அபாயங்களைச் சமாளிப்பதற்கான புதிய விதிகளின் ஒரு பகுதியாக, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
விதிமுறைகள் தற்போது வரையறுக்கப்படுகின்றன என்றும் தயாரானதும் விவரங்கள் பகிரப்படும் என்றும் அவர் சொன்னார்.
வாங்கும் தருணத்தில் உள்ளே இருக்கும் பொருள்கள் வாடிக்கையாளருக்குத் தெரியாதவாறு மூடப்பட்டிருக்கும் பொட்டலங்களே புதிர்ப் பெட்டிகள் என்று அவர் விளக்கம் அளித்தார்.
அத்தகைய பெட்டிகளில் வழக்கமாக விளையாட்டுப் பொருள்கள், அட்டைகள், உருவச்சிலைகள் ஆகியவை இருக்கும்.
அந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தேசக் கால அட்டவணை தகுந்த நேரத்தில் தெரியப்படுத்தப்படும் என்றும் பேச்சாளர் கூறினார்.
உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பிப்ரவரி 12ஆம் தேதி புதிர்ப் பெட்டிகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து, அண்மைய செய்தி வெளிவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த விவகாரத்தை ஆராய்ந்த பிறகு, அத்தகைய பொருள்களை ஒழுங்குபடுத்த, அமைச்சும் சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையமும் முடிவெடுத்ததாக அமைச்சர் கூறினார்.
புதிர்ப் பெட்டி அல்லது ‘கச்சா’ (gacha) தயாரிப்புகளுக்கான முரண்பாடுகள் வரம்புகளைக் கட்டாயமாகவும் தரப்படுத்தப்பட்டதாகவும் வெளியிடுவதை அரசாங்கம் சட்டமாக்க விரும்புகிறதா என்று ஹவ்காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சண்முகம் பதிலளித்தார்.
திரு டானின் பரிந்துரை, விதிமுறைகளுக்காகப் பரிசீலிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக இருக்கும் என்று திரு சண்முகம் கூறினார்.
பல சந்தர்ப்பங்களில், அத்தகைய புதிர்ப் பெட்டிகளில் ‘அரிதான’ சேகரிப்புகளும் இருக்கும். அவற்றை வாங்குபவர்கள் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
தற்போது புதிர்ப் பெட்டிகளின் தொடர்பில் சிங்கப்பூரில் குறிப்பிட்டு எந்தவொரு சட்டமும் இல்லை.

