நோன்புப் பெருநாள் விடுமுறையில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்

2 mins read
67731c0e-9b36-4cf6-97f4-5eef37848c85
ஜோகூருக்குள் மார்ச் 14 முதல் 24 வரை 5.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இரு நிலச் சோதனைச் சாவடிகளையும் கடந்தனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோன்புப் பெருநாள் நீண்ட வார இறுதியில் ஜோகூருக்குச் செல்லும் பயணிகள் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகள் இரண்டிலும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் புதன்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளது.

மார்ச் 28ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான நீண்ட வார இறுதியில், சிங்கப்பூரில் பொது விடுமுறை என்பதால், குடிநுழைவு சோதனைக்கு ஆகும் கூடுதல் நேரத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு ஆணையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியது.

மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய இரு நாள்களும் மலேசியாவில் பொது விடுமுறை என்று ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூரின் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜோகூருக்குள் மார்ச் 14 முதல் 24 வரை 5.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இரு நிலச் சோதனைச் சாவடிகளையும் கடந்தனர். இதில் மார்ச் 15 முதல் 23 வரையிலான பள்ளி விடுமுறையும் அடங்கும்.

மார்ச் 17ஆம் தேதி திங்கட்கிழமை மட்டும் 550,000க்கும் மேற்பட்டவர்கள் இரு சோதனைச் சாவடிகளையும் கடந்தனர். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கார்ப் பயணிகள் குடிநுழைவு சோதனைகளை முடிக்க மூன்று மணி நேரம் வரை காத்திருந்தனர் என்று ஆணையம் தெரிவித்தது.

2024 டிசம்பர் 20ஆம் தேதி, ஒரே நாளில் ஆக அதிகமாக 563,000 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்தனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் ஜோகூர் பாரு உள்ளிட்ட பல பகுதிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. முழங்கால் அளவுக்கு நீர் மட்டம் இருந்ததாக உள்ளூர் ஊடகங்களும் இணையச் செய்திகளும் தெரிவித்தன.

வெள்ளத்தால் சாலை மூடல்களும் போக்குவரத்து மெதுவாக நகர்வதும் ஜோகூருக்குள் நெரிசல் அதிகரிப்பதற்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்