தண்டப் புள்ளிகள் ரத்து; பணத்தைத் திரும்பத் தரும் போக்குவரத்துக் காவல்துறை

1,500க்கும் மேற்பட்ட வாகனவோட்டிகளுக்குத் தவறுதலாக அபராதம் விதிப்பு

தண்டப் புள்ளிகள் ரத்து; பணத்தைத் திரும்பத் தரும் போக்குவரத்துக் காவல்துறை

2 mins read
93fa0a17-154b-46c0-866a-52c0b771faad
சிவப்பு விளக்குக் கண்காணிப்புக் கருவிக்கு முன்னால், வேக வரம்பு குறித்து எச்சரிக்கும் பலகை. - கோப்புப் படம்: காவல்துறை

கடந்த 2025 அக்டோபர் 30 முதல் டிசம்பர் 8 வரை, வேக வரம்பை மீறியதற்காக 1,523 வாகனவோட்டிகளுக்குத் தவறாக விதிக்கப்பட்ட தண்டப் புள்ளிகளைப் போக்குவரத்துக் காவல்துறை ரத்துசெய்யவுள்ளது. தண்டப் புள்ளிகள் நீக்கப்படும் என்பதோடு, வாகனவோட்டிகள் செலுத்திய அபராதத் தொகையும் அவர்களிடம் திரும்பத் தரப்படும்.

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் உள்ள மூன்று வேகக் கண்காணிப்புக் கருவிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நிகழ்ந்ததாகப் போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் வியாழக்கிழமை (பிப்ரவரி 5) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தவறு நடந்தது எப்படி?

அந்த மூன்று கண்காணிப்புக் கருவிகளிலும் வேக வரம்பு தவறுதலாக மணிக்கு 70 கி.மீ. என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த விரைவுச்சாலையில் வாகனவோட்டிகளுக்கான உண்மையான வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ. ஆகும்.

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் செல்லும் வாகனத்தில் எடுக்கப்பட்ட படம்.
காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் செல்லும் வாகனத்தில் எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

2025 டிசம்பர் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான தணிக்கையின்போது போக்குவரத்துக் காவல்துறை இந்தத் தவற்றைக் கண்டறிந்தது.

2025 அக்டோபர் 30ஆம் தேதி வன்பொருள் மாற்றத்தின்போது, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்பந்ததாரரால் இந்தத் தவறான வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட வாகனவோட்டிகள் இதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்துப் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கும்.

ஏற்கெனவே அபராதத்தைச் செலுத்தியவர்களுக்கு பேநவ் அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும்.

வாகனவோட்டிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக ஆணையமும் போக்குவரத்துக் காவல்துறையும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் அனைத்து வேகக் கண்காணிப்புக் கருவிகளும் சரிபார்க்கப்பட்டு, வேக வரம்புகள் சரியாக இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவு முழுவதும் உள்ள மற்ற வேகக் கண்காணிப்புக் கருவிகளையும் போக்குவரத்துக் காவல்துறை சரிபார்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்