வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக காலை உச்ச நேரத்தில் ரயில் சேவைகளில் சற்று தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சேவைகள் முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பின.
புவாங்கோக் நிலையத்தில் காலை சமிக்ஞை கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் அரை மணி நேரம் வரை தாமதத்தை எதிர்நோக்கினர்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் காலை 8.45 மணிக்கு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், வடக்கு-கிழக்கு பாதையில் ரயில் சேவை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்தது. அதையடுத்து, இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகள் முடிவுக்கு வந்தன.
எஸ்பிஎஸ் டிரான்சிட் காலை 6.23 மணிக்கு வெளியிட்ட அதன் முதல் சமூக ஊடகப் பதிவில், பயணிகள் கூடுதலாக 10 நிமிடப் பயண நேரத்தை எதிர்பார்க்க வேண்டும் எனக் கூறியிருந்தது. பின்னர், அதை 15 நிமிடங்கள் என அது மாற்றியது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் காலை 7.11 மணிக்கு வெளியிட்ட அடுத்த பதிவில், தாமதம் 20 நிமிடங்கள் எனவும் காலை 7.43 மணிக்கு அது 30 நிமிடங்கள் எனவும் மாற்றியமைத்தது.
சிராங்கூன், ஹவ்காங், செங்காங் பேருந்து நிலையங்களில் வழக்கமான பேருந்துச் சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் இரு முனைகளான டோபி காட், பொங்கோல் கோஸ்ட் நிலையங்களுக்கு இடைப்பட்ட நிலையங்களுக்கு அருகே பேருந்து நிறுத்தங்களில் இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகளும் வழங்கப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.