வட்டப் பாதை பெருவிரைவு ரயில் சேவையில் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) சுமார் ஒரு மணிநேரத்துக்கு இடையூறு நேர்ந்தது.
தை செங் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் நின்றுபோனதால் சேவைத் தாமதம் ஏற்பட்டது என ‘ஏஷியாஒன்’ ஊடகம் தெரிவித்தது.
சனிக்கிழமை மாலை சுமார் 6.20 மணி முதல் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. நின்றுபோன ரயிலுக்குள் மின்தடை ஏற்பட்டதாக சில பயணிகள் கூறினர்.
சேவை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்காகப் பல பயணிகள ரயில் கதவுகளுக்கு அருகே காத்திருந்தது காணப்பட்டது.
ரயில் கோளாறு காரணமாக வட்டப் பாதையில் புரோமினாட், சிராங்கூன் நிலையங்களுக்கு இடையே பயண நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று எஸ்எம்ஆர்டி, சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது. அவ்விரு நிலையங்களுக்கும் இடையே இலவச பேருந்துச் சேவைகளும் வழங்கப்பட்டன.
புரோமினாட், சிராங்கூன் நிலையங்களுக்கு இடையே 10 பேருந்து நிறுத்தங்கள் இருக்கின்றன.
ரயில் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் புரோமினாட், சிராங்கூன் நிலையங்களுக்கு இடையே சேவை படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது என்றும் எஸ்எம்ஆர்டி சனிக்கிழமை இரவு 7.10 மணியளவில் அறிவித்தது.
இரவு 7.30 மணிக்குள் ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பியது என்றும் இலவச பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டது என்றும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. அந்நிறுவனம் இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.