உதவிக்கரம் வழங்க செங்காங் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

உதவிக்கரம் வழங்க செங்காங் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

சில சூழ்நிலைகளில் சக மாணவரை காட்டிக்கொடுக்காமல் எவ்வாறு உதவலாம் போன்ற பயிற்சிகள் செங்காங்கின் 5 தொடக்கப் பள்ளிகளில் நடக்கின்றன
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2026 - 9:28 pm

2 mins read

பள்ளியில் சக மாணவர்கள் தனிமைப்படுத்தப்படும்போதும் முறையாக நடத்தப்படாத நிலையிலும் அவர்களுடன் தொடர்புகொண்டு ஆறுதல் வழங்கி உதவி செய்தல் போன்ற நற்பழக்கங்களை ஊக்குவிக்க செங்காங்கின் தொடக்கப்பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அப்பள்ளிகளில் ஒன்றான பால்ம்வியூ தொடக்கப்பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் ஜேரமி ஆங் சக மாணவர்கள்மீது அக்கறையும் ஒருவருக்கொருவர் பரிவையும் வளர்க்கும் பயிற்சிகளை அங்கு அறிமுகப்படுத்தினார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் செங்காங் அக்கம்பக்கக் காவல் நிலையத்தின் பள்ளிகளுடனான பங்காளித்துவ ஆதரவோடு மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்த கல்வி அமைச்சு பரிந்துரைத்த மறுஆய்வின்படி, இப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்பயிற்சியில், மாணவர்கள் துன்புறுத்தப்படும்போது அல்லது மற்றவர்களால் தாக்கப்படும் நிலையில் எவ்வாறு அதிலிருந்து மீண்டு, உதவி நாடுவது என்பது சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கார்ட் (GUARD) என்ற அழைக்கப்படும் அப்பயிற்சியில் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதையும் கடந்து பாதிக்கப்படக்கூடிய மற்ற மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கண்காணித்து, துன்புறுத்தலுக்கும் வன்முறைக்கும் எதிரான நடைமுறைத் திறன்களை வழங்குவது திட்டத்தின் இலக்கு.

ஒரு மாணவர் மனம் புண்படும் விதமான பெயர்களைக் கொண்டு அழைத்தல், அவரைத் தனிமைப்படுத்தி ஒதுக்குதல், சண்டையிடுதல் ஆகிய வேதனை விளைவிக்கும் செயல்பாடுகளும் அதில் அடங்கும்.

கார்ட் திட்டத்தில் ஐந்து அம்சங்கள் உள்ளன. உண்மை அறிதல், நிலைமையைப் புரிந்துகொள்தல், பாதுகாப்பாகச் செயல்படுதல், பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையான பெரியோரிடம் உதவி நாடுதல், அநீதிக்கு எதிராக தைரியமாகப் பங்காற்றுதல் ஆகியன அவையாகும்.

தற்போது அத்திட்டம் செங்காங்கில் உள்ள ஐந்து தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கர்கிரீன், நார்த் விஸ்தா, செங்காங், ரிவர்வேல், ஸ்பிரிங்டேல் ஆகிய ஐந்து தொடக்கநிலைப் பள்ளிகளின் மாணவர்கள் அத்திட்டத்தில் பயிற்சி பெறுகின்றனர்.

பொதுவாகப் பல மாணவர்களுக்கு இயற்கையிலேயே மற்றவருக்கு உதவும் தன்மை அமைந்துள்ளது என்ற திரு ஆங், சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதில் அவர்கள் தடுமாறும் வாய்ப்புள்ளது என்றார். பெரியோர்கள் கொடுக்கும் அழுத்தம், நிச்சயமற்ற தன்மை, பயமூட்டும் சந்தர்ப்பங்கள் அவர்களை பாதிக்கக்கூடும் என்றார் அவர்.

செங்காங் காவல்நிலைய அதிகாரிகள் அடிக்கடி அப்பள்ளிகளுக்கு வருகை தந்து மாணவர்களையும் சட்டாம்பிள்ளைகளையும் சந்தித்து வழிகாட்டுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்